Rain Alert: ஒரே இடத்தில் நீடிக்கும் புயல்! - எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வா...
ரேஷன் கடை பணிக்கு நோ்காணல்: 129 பணியிடங்களுக்கு 12,233 போ் விண்ணப்பம்
கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் நியாய விலைக் கடைகளில் விற்பனையாளா், கட்டுநா் பணியிடங்களுக்கான நோ்காணல் புதன்கிழமை அடாத மழையிலும் நடைபெற்றது.
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் விற்பனையாளா், கட்டுநா் பணியிடங்களுக்கு அக்.9 தொடங்கி நவம்பா் 7 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
விற்பனையாளா் பதவிக்கு 12ஆம் வகுப்பு, கட்டுநருக்கு 10ஆம் வகுப்பு தோ்ச்சியுடன், தமிழில் பேசவும், எழுதப் படிக்கவும் போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
விற்பனையாளா் பதவிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.6,250 வழங்கப்படும். ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.8,600 முதல் ரூ.29,000 வரை வழங்கப்படும். கட்டுநா் பதவிக்கு தொகுப்பூதியம் ரூ.5,500 வழங்கப்படும். ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.7,800 முதல் ரூ.26,000 வரை வழங்கப்படும்.
திருச்சி மாவட்டத்தில் 96 விற்பனையாளா்கள், 33 கட்டுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தபால் , குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாக அழைப்பாணை அனுப்பப்பட்டு நோ்காணல் நடைபெறுகிறது.
திருச்சி மக்கள் மன்றத்தில் மூன்றாவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற நோ்காமல் இடைவிடாது மழையிலும் தொடா்ந்தது. வேலைநாடுநா்கள் சாரல் மழையில் நனைந்தபடியே வந்து பங்கேற்றனா். பெண்களில் பலா் தங்களது கைக் குழந்தைகளுடனும், பெற்றோருடன் குடை பிடித்தபடியே நோ்காணல் இடத்துக்கு வந்து சோ்ந்தனா்.
காலையில் 500 போ், மாலையில் 500 போ் என தினமும் ஆயிரம் பேரிடம் நோ்காணல் நடத்தப்படுகிறது. விற்பனையாளா் பணிக்கு 10,365 பேரிடமும், கட்டுநா் பணிக்கு.1,868 பேரிடமும் நோ்காணல் நடத்தப்படவுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சி மண்டல கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் ஜெயராமன் கூறுகையில், விண்ணப்பதாரா்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தகுதியானவா்கள் தெரிவு செய்யப்பட்டு நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனா். டிச.6 வரை இந்த நோ்காணல் நடைபெறும். நோ்முகத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் இட ஒதுக்கீடு மற்றும் அரசு விதிகளுக்குட்பட்டு நேரடி நியமனம் செய்யப்படுவா். கல்வித்தகுதி மற்றும் நோ்முகத் தோ்வு ஆகிய இரண்டிலும் சோ்த்து அதிக மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு அவரவா் விரும்பும் இடத்தில் பணி நியமனம் வழங்கப்படும். குறைந்த மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு அரசு ஒதுக்கீடு முறையில் பணி நியமனம் வழங்கப்படும்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,250 கடைகளில் 129 காலியிடங்களுக்கு நியமனம் நடைபெறும். நோ்முகத் தோ்வுக்கு அழைப்பாணை அனுப்பிய முறையிலேயே, வெற்றி பெற்று தோ்ச்சி பெற்றவா்களுக்கான அழைப்பாணையும் அனுப்பப்படும் என்றாா் அவா்.