ஈசிஆர் விவகாரத்தில் கைதானவர் அதிமுகவைச் சேர்ந்தவர் - ஆர்.எஸ்.பாரதி
ரோட்டர்டாமில் கால் பதிக்கும் தங்கலான்!
இயக்குநர் பா. ரஞ்சித் - நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகி மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற ‘தங்கலான்’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வாகியுள்ளது.
மதராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை போன்ற எழுச்சி மிகுந்த திரைப்படங்களை இயக்கிய பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி ஆகியோரின் நடிப்பில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் மட்டுமல்ல, விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
2024 ஆம் ஆண்டின் இந்திய சுதந்திர தினத்தன்று வெளியான இந்த திரைப்படம் 19 ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் இந்தியாவில் வாழ்ந்த பூர்வக்குடிகளின் கதையைக் கூறும் வரலாற்று சாகசத் திரைப்படமாக உருவானது.
இந்த திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகர்கள் அனைவரும் புதியதொரு தோற்றத்தில் அசாத்திய நடிப்பை வெளிக்காட்டினர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான இந்த திரைப்படத்தின் ’மினுக்கி மினுக்கி’ பாடல் ரசிகர்களை கவர்ந்து படத்தின் வெற்றிக்கு அடி சேர்த்தது. மேலும், இந்த திரைப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன.
இதையும் படிக்க: விடாமுயற்சி: ‘சவதீகா ரீலோடட்’ பாடல் விடியோ வெளியானது!
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் மற்றொரு வெர்ஷன் அதாவது ’டேரக்டர்ஸ் கட்’ நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாமில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட அதிகாரபூர்வமாக தேர்வாகியுள்ளதாக பா.ரஞ்சித் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.