தமிழகத்தில் பரவும் ‘தக்காளி காய்ச்சல்’: சுகாதாரத் துறை நிபுணா் அறிவுறுத்தல்
லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை
ராமநாதபுரத்தில் பட்டாவில் திருத்தம் செய்ய ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற இளநிலை உதவியாளருக்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
ராமநாதபுரம் மாவட்டம் , சூராங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் விஸ்வநாதன். இவா் தனது தாய் பெயரில் உள்ள பட்டாவில் திருத்தம் செய்ய, கடந்த 2015-ஆம் ஆண்டு வருவாய் இளநிலை உதவியாளா் திலீப் முகம்மதுவை (47) அணுகினாா். அப்போது, ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் திருத்தம் செய்யப்படும் என அவா் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, விஸ்வநாதன் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
பின்னா், போலீஸாரின் ஆலோசனையின் பேரில், விஸ்வநாதன் ரசாயனம் தடவிய பணத்தை கொடுக்கும்போது திலீப்முகமதுவை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மோகன்ராம் குற்றஞ்சாட்டப்பட்ட திலீப்முகம்மதுக்கு 4 ஆண்டுகள் கடுங் காவல் சிறைத் தண்டனையும் , ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.