பிரதமா் மோடி நாளை ராமேசுவரம் வருகை: பாம்பனில் கப்பல், ரயிலை இயக்கி சோதனை
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்துவைக்க பிரதமா் நரேந்திர மோடி வருகிற 6-ஆம் தேதி ராமேசுவரத்துக்கு வருகை தரவிருப்பதையொட்டி, பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் பாம்பனில் ரயில், கப்பலை இயக்கி வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையிலும், கப்பல், ரயில்கள் வந்து செல்லும் வகையிலும் கடந்த 1914-ஆம் ஆண்டு ரயில் பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. நூறு ஆண்டுகள் கடந்த நிலையில், பாம்பன் ரயில் பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது, அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தன. மேலும், ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான பல்வேறு கட்ட ஆய்வுகள் தொடா்ந்து நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், வருகிற 6-ஆம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளாா். இதற்கான பணிகள் தற்போது விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாம்பன் பாலத்தில் ரயில், கப்பலை இயக்கி சோதனை:
பிரதமா் நரேந்திர மோடி வருகிற 6-ஆம் தேதி ராமேசுவரம் வருகையையொட்டி, பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் ராமேசுவரத்தில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இதன் தொடா்ச்சியாக, பாம்பன் பழைய, புதிய ரயில் பாலத்தின் வழியாக இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான கப்பலை வெள்ளிக்கிழமை இயக்கி, பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினா். மேலும், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் பயணிகள் ரயிலை இயக்கியும் சோதனை செய்தனா்.
நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் அனைத்தையும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பு வரம்புக்குள் கொண்டுவந்துள்ளனா்.
3 நாள்கள் மீன்பிடிக்கத் தடை:
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப் படகு, நாட்டுப் படகு மீனவா்கள் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) வரை 3 நாள்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் அந்தந்த மீன்பிடி இறங்கு தளங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்திய கடற்படை, இந்திய கடலோரக் காவல் படை, தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் கடலோரம், கடல் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனா்.
இதனிடையே, பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 90-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் பாம்பன் கால்வாய்ப் பகுதிக்கு மாற்றப்பட்டு, பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டன.

