திருமணத்தில் தகராறு; மீசை, தலை முடியை வெட்டிய குடும்பத்திற்கு ரூ.11 லட்சம் அபராத...
லாகூர் கடாபி திடல் புதுப்பிக்கும் பணிகள் நிறைவு! -பாக். கிரிக்கெட் வாரியம்
லாகூர் கடாபி திடல் புதுப்பிக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் மோதும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், போட்டிகள் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் நடைபெறவிருக்கின்றன. இந்தியாவுக்கான போட்டிகள் துபையில் நடைபெறவுள்ளன.
பாகிஸ்தானில் உள்ள மைதானங்களின் புதுப்பிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த நிலையில் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தின் புதுப்பிக்கும் பணிகள் 117 நாள்களாக நடைபெற்றுவந்தது. இது தற்போது நிறைவு பெற்றுவிட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மைதானத்தில் உயர்கோபுர மின்விளக்குகள், அதிகரிக்கப்பட்ட இருக்கை வசதிகள், மருத்துவ வசதி உள்ளிட்டவைகள் குறித்த படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள் | ஓய்வை அறிவித்த மார்கஸ் ஸ்டாய்னிஸ்..! ரசிகர்கள் அதிர்ச்சி!
இதுபற்றி பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் பிசிபி தலைவருமான மோசின் நக்வி கூறுகையில், “இவ்வளவு சர்ச்சைகளுக்கு மத்தியில் மைதானத்தை புதுப்பிக்க இரவு-பகலாக உழைத்த அனைவருக்கும் நன்றி. கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் மைதானப் புதுப்பிப்பு பணிக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை அளவைவிட அதிகரித்துவிட்டது. இது எதிர்காலத்தில் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
கடாபி மைதானம் போட்டி ஆரம்பிக்கும் ஒருவாரத்திற்கு முன்னதாக, வருகிற 12 ஆம் தேதி ஐஐசி வசம் ஒப்படைக்கப்படவுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மைதானத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு மைதானத்தைத் திறந்து வைக்கவிருக்கிறார். மேலும், அலி ஸஃபார், ஐமா பைக், ஆரிஃப் லோஹர் ஆகியோர் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பாகிஸ்தான் - நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா மோதும் முத்தரப்பு ஒருநாள் போட்டியின் பாகிஸ்தான் - நியூசிலாந்து மோதும் போட்டி பிப்ரவரி 8 ஆம் தேதி இந்த மைதானத்தில் நடைபெறுகிறது.
இதேபோல 11 ஆம் தேதி கராச்சி தேசிய மைதானத்தில் திறப்பு விழா நடைபெறவுள்ளது. இதை அதிபர் ஆசிஃப் ஜர்தாரி திறந்து வைக்கவுள்ளார்.
மூன்று மைதானங்களுக்கு சேர்த்து மொத்தமாக பாகிஸ்தான் ரூபாயில் 1280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதற்கு மொத்தமாக ரூ.1800 கோடி(பாகிஸ்தான் ரூபாயில்) வரை செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.