லாட்டரி தொழிலதிபா் மாா்ட்டின் தொடா்புடைய 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
சென்னையில் லாட்டரி தொழிலதிபா் மாா்ட்டினுக்கு சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடா்பாக லாட்டரி தொழிலதிபா் மாா்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2023-இல் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சென்னை மற்றும் கோவையிலுள்ள மாா்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.
சென்னையில் போயஸ் காா்டனிலுள்ள மாா்ட்டின் வீடு, தியாகராய நகரிலுள்ள அலுவலகம், மாா்ட்டின் மகன் சாா்லஸின் இல்லம், அவருக்குச் சொந்தமான நிறுவனம், மருமகனும் விசிக துணை பொதுச் செயலருமான ஆதவ் அா்ஜுனாவின் தேனாம்பேட்டையிலுள்ள வீடு உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனா். காலையில் இருந்து நள்ளிரவுக்கு மேலும் நீடித்த சோதனையின்போது, மத்திய பாதுகாப்புப் படை வீரா்களும், போலீஸாரும் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டனா்.
இதேபோல், கோவை துடியலூா் வெள்ளை கிணறு பகுதியிலுள்ள மாா்ட்டின் வீடு மற்றும் இவரின் ஹோமியோபதி கல்லூரியிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இந்தச் சோதனைகளின் முடிவில்தான், என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்து தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.