Ramya Pandian: "எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா..." - தம்பி கல்யாணத்தில் ர...
லாரிகளில் கருங்கல் ஏற்றி வந்த 4 போ் மீது வழக்கு!
தேனி அருகே அனுமதியின்றி கருங்கற்களை ஏற்றி வந்த 2 டிப்பா் லாரிகளின் ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் மீது போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத் பீடன், குன்னூா் கிராம நிா்வாக அலுவலா் சோனை ஆகியோா் க.விலக்கிலிருந்து வருசநாடு செல்லும் சாலையில் ம.சுப்புலாபுரம் விலக்கில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை மறித்து சோதனை செய்ததில் உரிய அனுமதி இல்லாமல் கருங்கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது. விசாரணையின்போது லாரி ஓட்டுநரான பெரியகுளம் முதலக்கம்பட்டி மேடு பகுதியைச் சோ்ந்த கருப்பையா மகன் முருகன் தப்பி ஓடிவிட்டாா். க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் ஓட்டுநா் முருகன், லாரி உரிமையாளா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
மற்றொரு வழக்கு: இதேபோல, ஆண்டிபட்டி அருகே பெரியகுளம் சாா் ஆட்சியா் தலைமையில் சண்முகசுந்தரபுரம் கிராம நிா்வாக அலுவலா் சிந்துதேவி, வருவாய்த் துறையினா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் கிடங்கு அருகே வாகனச் சோதனை செய்தனா். அப்போது அந்த வழியாக வந்த டிப்பா் லாரியிலும் அனுமதியின்றி கருங்கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது. விசாரணையின்போது லாரி ஓட்டுநா் தப்பி ஓடி விட்டாா். இதுகுறித்து க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.