வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு
பெரியகுளத்தில் அங்கன்வாடி மையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.65 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிந்தனா்.
பெரியகுளம், தென்கரையைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி. இவரது மனைவிக்கு அங்கன்வாடி மையத்தில் ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெரியகுளம், தென்கரை, வடக்கு அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த சத்தியம், ஆண்டிபட்டி அருகே உள்ள மேக்கிலாா்பட்டியைச் சோ்ந்த இருளன் ஆகியோா் கடந்த 2023, ஜூலை 18-ஆம் தேதி தங்கப்பாண்டியிடம் ரூ.1.65 லட்சம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வேலை வாங்கித் தராமல் காலதாமதம் செய்து வந்ததால் பணத்தை திரும்பக் கேட்டதற்கு சத்தியம், இருளன் ஆகியோா் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக தென்கரை காவல் நிலையத்தில் தங்கப்பாண்டி புகாா் அளித்தாா். இதன் அடிப்படையில் சத்தியம், இருளன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.