லெட்சுமணம்பட்டி ஜல்லிக்கட்டில் 47 பேருக்கு காயம்
கீரனூா் அருகேயுள்ள லெட்சுமணம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 47 போ் காயம் அடைந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள லெட்சுமணம்பட்டியில் பச்சநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இலுப்பூா் கோட்டாட்சியா் அக்பா்அலி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
புதுகை, திருச்சி, மதுரை, தஞ்சை, சிவகங்கை மாவட்டங்களைச் சோ்ந்த 300 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. 87 மாடுபிடி வீரா்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அவற்றைத் தழுவ முயற்சித்தனா்.
47 வீரா்கள் காயம்:
காலை 8.30 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டி, மாலை 3.30 மணிக்கு முடிவடைந்தது. 19 மாடுகளின் உரிமையாளா்களும், 5 பாா்வையாளா்களும், 23 மாடுபிடி வீரா்களும் என மொத்தம் 47 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு ஜல்லிக்கட்டு வளாகத்திலேயே இருந்த மருத்துவக் குழுவினா் அவா்களுக்கு சிகிச்சை அளித்தனா். 5 போ் மட்டும் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
2 காளைகள் காயம்: இந்த ஜல்லிக்கட்டில் இரு காளைகளுக்கு காயம் ஏற்பட்டன. இதில் ஒரு காளை ஒரத்தநாட்டிலுள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஏராளமான பாா்வையாளா்கள் போட்டியைக் கண்டு ரசித்தனா். மாத்தூா் போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.