வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரித்த போது, வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
வக்ஃப் சட்டத்திருத்தத்தை எதிர்த்த மனுக்களை விசாரணைக்கு எடுப்பது தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார், நீதிபதி விஸ்வநாதன் ஆகியோர் மத்திய அரசுக்கு சரமாரிக் கேள்விகளை எழுப்பியதோடு, வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமியர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என உத்தரவிட்டனர்.
ஜமியத் உலமா-ஐ-ஹிந்த் அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், தற்போது, வக்ஃப் வாரியங்களில் மற்றும் கவுன்சில்களில் முஸ்லிம்கள் மட்டுமே உறுப்பினர்களாக இணைய முடியும். ஆனால், வக்ஃப் சட்டத் திருத்தத்தினால், இந்துக்களும் உறுப்பினர்களாக சேரலாம். இது, அடிப்படை உரிமைகள் மீது, நாடாளுமன்ற சட்டத்தின் மூலம், நேரடியாக தொடுக்கும் தலையீடு ஆகும் என்று வாதிட்டார்.
இதனைக் கேட்ட நீதிபதி விஸ்வநாதன், நிர்வாகம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான சட்டப்பிரிவு 26-இன் சொற்களை அத்தியாவசிய மத நடைமுறைகளுடன் குழப்ப முடியாது என்று தெரிவித்தார்.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறுகையில், இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் மட்டுமே முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்றார்.
ஆனால், அவ்வாறு இல்லை என்று மறுத்த வழக்குரைஞர் கபில் சிபல், இல்லை, இல்லை, இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் தவிர சட்டப்பிரிவு 26 படி அனைவருமே முஸ்லிம்கள். ஆனால், புதிய சட்டத்திருத்தத்தின்படி, 22 உறுப்பினர்கள் 20 பேர் மட்டுமே முஸ்லிம்களாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இது முழுக்க முழுக்க மனு தாக்கல் மூலமாகவே நடைபெறும், 1995-வது சட்டத்தைப் பாருங்கள். அதில் அனைவருமே முஸ்லிம்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வக்ஃப் நிலங்களை பதிவு செய்வதால் மோசடிகள் தவிர்க்கப்படும் என்கிறது சட்டப்பிரிவு. அதில் என்ன பிரச்னை இருக்கிறது என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, அது அவ்வளவு எளிதானது அல்ல. வக்ஃப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போது, வக்ஃப்-க்கு சொந்தமான 300 ஆண்டு காலத்துக்கு முந்தைய சொத்துகளின் பத்திரங்களை கேட்பார்கள். அதுதான் பிரச்னை என்றார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வக்ஃப் சொத்துகளை ஆட்சியர்கள் முடிவு செய்வது நியாயமா என்று கேட்டனர். இதற்கு, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறுக்கிட்டு, சட்டப்பிரிவு அப்படித்தான் தெளிவாக சொல்கிறது என்றார்.
தொடர்ந்து வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.