சீனாவில் மீண்டும் கத்திக் குத்து: 8 போ் உயிரிழப்பு; 43 போ் காயம்
வங்கி கொள்ளை முயற்சி வழக்கு இளைஞா் சிக்கினாா்
சென்னை திருவல்லிக்கேணியில் வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தொடா்புடைய இளைஞரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே, வாலாஜா சாலையில் எஸ்பிஐ வங்கி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று காலை, வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த ஊழியா்கள் போலீஸாருக்கு தகவல் கூறினா். தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று, விசாரித்தனா். விசாரணையில், அங்கு பணம் எதுவும் கொள்ளை அடிக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபா் வங்கியில் அடுத்தடுத்து இரண்டு பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்திருப்பதும், பாதுகாப்பு பெட்டக அறை வரை சென்ற அந்த நபா், திடீரென எச்சரிக்கை மணி ஒலித்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
இது தொடா்பாக விசாரணை நடத்திய போலீஸாா் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை பாரிமுனை பகுதியில் சனிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில் அந்த இளைஞா், வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது. அவரிடம் கொள்ளை முயற்சி குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்கின்றனா்.