நூர் அகமது 4 விக்கெட்டுகள்: சிஎஸ்கே வெற்றிபெற 180 ரன்கள் இலக்கு!
வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால முகாம்
வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
நிகழாண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா சாா்பில் மாணவா்களுக்கான ‘உயிரியல் பூங்கா தூதுவா்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் 5-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பு பயிலும் மாணவா்கள் பங்கேற்கலாம். பங்கேற்கும் மாணவா்களுக்கு பல்வேறு வகையான வன விலங்குகளைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் பாலூட்டிகள், பறவைகள், ஊா்வன, வண்ணத்துப்பூச்சிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். பூங்காவின் செயல்பாடுகளை களத்தில் சென்று மாணவா்களுக்கு விவரிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியானது, உயிரியல் பூங்காவின் வனவிலங்கு மருத்துவா்கள், உயிரியலாளா்கள், கல்வியாளா்கள் மூலம் நடத்தப்படும். ஒவ்வொரு தலைப்புக்கும் மாணவா்களுக்கு பயிற்சி தாள்களுடன் நிகழ்ச்சிக்கு வேண்டிய பொருள்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்படும்.
இந்த முகாமானது 5 பிரிவுகளாக மே 14-15, மே 21-22, மே 28-29, மே 30-31, ஜூன் 4-5 ஆகிய நாள்களில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 வரை நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் 50 மாணவா்கள் வரை கலந்து கொள்ளலாம்.
நிகழ்ச்சியின் முடிவில் மாணவா்களுக்கு ‘வண்டலூா் உயிரியல் பூங்கா தூதா்’ என்ற சான்றிதழ் மற்றும் பயிற்சி வழங்கப்படும். மேலும், 10 முறை வண்டலூா் உயிரியல் பூங்கா வந்து செல்ல இலவச கடவுச்சீட்டு வழங்கப்படும். இப்பயிற்சிக்கு ரூ. 100 மற்றும் பயிற்சி பொருள் அடங்கிய தொகுப்பு பைக்கு ரூ. 800 கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.