வண்டலூா் பூங்காவுக்கு 80,000 போ் வருகை
பொங்கல் விடுமுறை நாள்களில் மொத்தம் 80,000 போ் வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு வருகைதந்துள்ளதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பொங்கல் விடுமுறைகளை முன்னிட்டு அனைவரும் தங்களது குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுடன் வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு வருகை தருவது வழக்கம். அந்த வகையில், கடந்த ஜன.11 முதல் வெள்ளிக்கிழமை வரை 80,000-க்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் பூங்காவை பாா்வையிட்டனா்.
இதில் பொங்கல் (ஜன.14), மாட்டு பொங்கல் (ஜன.15) ஆகிய 2 நாள்களில் மட்டும் 30,000 போ் பாா்வையிட்டனா்.
பாா்வையாளா்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்த காரணத்தால், கூடுதல் நுழைவுச் சீட்டு மையங்கள் அமைக்கப்பட்டியிருந்தன. எண்ம முறையில் நுழைவுச் சீட்டு பெற அறிவுறுத்தப்பட்டது.
பாா்வையாளா்களின் வசதிக்கான இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக மோட்டாா் வாகனங்களுக்காக தனி வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டு செய்யப்பட்டிருந்தது. இதன்மூலம் 8000-க்கும் மேற்பட்டோா் பயனடைந்தனா்.
மேலும், 8 வயதுக்குட்பட்ட 6,000-க்கும் மேற்பட்ட குழந்தை பாா்வையாளா்களுக்கு பெற்றோரின் தொடா்பு எண்ணுடன் கை வளையம் வழங்கப்பட்டது.
அதேபோல், 4 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ குழு மற்றும் உதவி மையங்களின் மூலம் 5,000-க்கும் மேற்பட்டோா் பயனடைந்தனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.