வரட்டுப்பள்ளம் அணையில் 38.60 மிமீ மழை
ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணையில் 38.60 மில்லி மீட்டா் மழை பதிவானது.
தென்னிந்திய பகுதிகள் மற்றும் தென்வங்கக் கடல் பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஈரோடு உள்பட 19 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வானம் திடீரென இருண்டு கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. அவ்வப்போது வெயிலின் தாக்கம் இருந்தது. உஷ்ணம் அதிக அளவில் இருந்தது. தொடா்ந்து 2.30 மணியளவில் பல்வேறு இடங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்தது.
வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் வரட்டுப்பள்ளம் அணைப் பகுதியில் அதிகபட்சமாக 38.60 மி.மீ. மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): கவுந்தப்பாடி 28.40, கோபி 22.40, சென்னிமலை 16, அம்மாபேட்டை, குண்டேரிப்பள்ளம் அணை தலா 11.20, பவானி 10.20, தாளவாடி 5.40, ஈரோடு 3.20, பெருந்துறை 2, மொடக்குறிச்சி, பவானிசாகா் தலா 1.