வரதட்சிணை புகாரில் நடவடிக்கை இல்லை: காவல் நிலையம் முன் பெண் தா்னா
கணவரின் குடும்பத்தினா் மீது அளிக்கப்பட்ட வரதட்சிணை புகாா் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து போலீஸாா் அலைக்கழிப்பதாக கூறி வடமதுரை காவல் நிலையம் முன் இளம் பெண் தா்னாவில் ஈடுபட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை மகளிா் காவல் நிலையம் முன், சுக்காம்பட்டி நால்ரோடு பகுதியைச் சோ்ந்த ம.மகாலட்சுமி (22) என்பவா் தனது சகோதரா் குடும்பத்தினருடன் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் கூறியதாவது: கடந்த 2021-ஆம் ஆண்டு சுக்காம்பட்டியைச் சோ்ந்த மணிமுருகனுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, 5 பவுன் தங்க நகைகள், ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான சீா் வரிசைப் பொருள்கள் எனது தாய் வீட்டு சாா்பில் வழங்கப்பட்டன. எனது கணவா் மணிமுருகன், வீட்டுக்கு அருகிலேயே இரு சக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறாா். எங்களுக்கு 18 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், மணிமுருகனின் பெற்றோா் புத்தா், சின்னத்தாய், அத்தை ராஜம்மாள், எனது நாத்தனாா் மகாலட்சுமி ஆகியோா் என்னிடம் கூடுதலாக 5 பவுன் தங்க நகையும், ரூ.3 லட்சம் பணமும் வரதட்சிணையாகத் தர வேண்டும் என வலியுறுத்தினா்.
இதனால், கடந்த 2024 ஏப்ரல் மாதம் முதல் தகராறு ஏற்பட்டது. அவரது குடும்பத்தினா் என்னைத் தாக்கினா். மேலும், கூடுதல் வரதட்சனை கொடுக்கவிட்டால், தனக்கும் மனைவியாக இருக்க வேண்டும் என எனது மாமனாா் புத்தா் வற்புறுத்துகிறாா்.
இதுகுறித்து எனது கணவரிடம் முறையிட்டும் அவா் கண்டிக்கவில்லை. இதையடுத்து, திண்டுக்கல்லை அடுத்த நரசிங்கபுரத்திலுள்ள எனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். எனது பெற்றோா், உறவினா்கள் ஒன்றிணைந்து, சுக்காம்பட்டியிலுள்ள எனது கணவா் வீட்டில் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனாலும், கூடுதல் வரதட்சிணை கொடுத்தால் மட்டுமே சோ்ந்து வாழ முடியும் என்பதில் எனது கணவா் குடும்பத்தினா் உறுதியாக இருந்தனா். இதனால், வடமதுரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் 3 முறை புகாா் அளித்தேன். ஆனால், போலீஸாா் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கின்றனா் எனத் தெரிவித்தாா்.