வரலாற்று சாதனை..! 2034 வரை விளையாட ஒப்பந்தமான கால்பந்து வீரர்!
பிரபல கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக 2034 வரை விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் எர்லிங் ஹாலண்டுக்கு ஒரு வாரத்துக்கு 5 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4.33 கோடி) கிடைக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
எர்லிங் ஹாலண்டு கிளப் போட்டிகள், மான்செஸ்டர் சிட்டி அணி வரலாற்றிலும் அதிகமாக சம்பளம் வாங்கும் நபராக சாதனை படைத்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
2022இல் மான்செஸ்டர் சிட்டியில் இணைந்த எர்லிங் ஹாலண்டு இன்னும் 9.5 ஆண்டுகள் வரை அதாவது 2034வரை அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் முடியும்போது எர்லிங் ஹாலண்டுக்கு 34 வயதாகியிருக்கும்.
யார் இந்த எர்லிங் ஹாலண்ட்?
நார்வேயின் தேசிய அணியில் 2019இல் அறிமுகமானார் எர்லிங் ஹாலண்ட். 36 போட்டிகளில் 33 கோல்கள் அடித்துள்ளார்.
24 வயதாகும் எர்லிங் ஹாலண்ட் 41 யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் சாம்பியன்ஷிப்பில் 42 கோல்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
எர்லிங் ஹாலண்ட் 126 கிளப் போட்டிகளில் 111 கோல்கள் அடித்துள்ளார்.
தனது 105ஆவது போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக 100ஆவது கோலை அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையுடன் சமன்செய்ததும் குறிப்பிடத்தக்கது.
நார்வே அணிக்காக அதிக கோல் அடித்தவர் பட்டியலில் ஜோர்கன் ஜுவ் (33 கோல்கள்) உடன் சமீபத்தில் சமன்செய்தார். ஜோர்கன் ஜுவ் 45 போட்டிகளில் செய்த சாதனையை எர்லிங் ஹாலண்ட் 36 போட்டிகளில் செய்து முடித்துள்ளார்.
இதன்மூலம் எர்லிங் ஹாலண்ட் 90 ஆண்டுகால சாதனையை சமன்செய்ததும் குறிப்பிடத்தக்கது.