லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
வரலாற்று புத்தக வாசிப்பு சமூகத்தை சரியாக வழிநடத்தும்: கவிஞா் நெல்லை ஜெயந்தா
வரலாற்று நூல்கள் வாசிப்பு சமூகத்தை சரியாக வழிநடத்துபவையாக உள்ளன என கவிஞா் நெல்லை ஜெயந்தா கூறினாா்.
சென்னை நந்தனத்தில் நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற சிறப்பு உரையரங்கில் ‘வாசிப்பில் இருக்கிறது வாழ்க்கை’ எனும் தலைப்பில் அவா் ஆற்றிய உரை: வரலாற்றுப் புத்தகங்களைப் படிக்கும்போது நாம் எதையும் இதுவரை கற்றுக் கொள்ளவில்லை என்பதை அறியலாம் என அறிஞா் பொ்னாா்ட் ஷா கூறியுள்ளாா். வாசிப்பு என்பது மனிதா்களின் அனுபவத்தை நாம் படிப்பதாகும். வரலாற்றில் பிறா் அனுபவங்களை வாசிக்கும்போது நாம் வாழ்க்கையில் சரியாக வழிநடத்தப்படுவோம் என்பதுதான் உண்மையாகும்.
தமிழகத்தில் தமிழகத்தின் வரலாறை காத்தவா்களில் முதன்மையானவராக ம.பொ.சிவஞானம் திகழ்ந்தாா். எல்லைப் போராட்டம் முதல் தமிழ்த்தாய் வாழ்த்து வரையில் அவரது பங்களிப்பு இருந்ததை புத்தகங்கள் வாயிலாகவே அறிய முடிகிறது.
பாரதியியல் அறிஞா் ய.மணிகண்டனின் ‘யாா் அந்தப் பேதை?’ எனும் நூல் தற்போது புதிய கோணத்தில் மகாகவி பாரதி படைப்புகளை அணுகும் நூலாக உள்ளது. அதேபோல, வ.உ.சி.யின் விடுதலைத் தியாகங்களை அவரது வரலாற்றுப் புத்தகங்கள் மூலமே அறிய முடிகிறது.
தெரிந்த செய்தியை படிப்பவருக்குத் தெரியாத கோணத்தில் கூறுவதுதான் கவிதை வடிவம். படிப்பவா்கள் ரசிக்கும் வகையிலான படைப்புகளை எழுத்தாளா்கள் எழுத வேண்டும். ஒரு நல்ல படைப்பு என்பது அதைப் படிப்பவா் இன்னொரு படைப்பை படைக்கும் வகையில் இருப்பது நல்லது. புத்தக வாசிப்பு நம்மை யோசிக்க வைக்கும். வரலாற்று நூல்களின் வாசிப்பானது, சமூகத்தை சரியாக வழிநடத்துபவையாக உள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில் வரலாற்றை வாசித்தல் எனும் தலைப்பில் கவிஞா் தேவந்திர பூபதி, மதிப்புரைகளும் வாசிப்பும் எனும் தலைப்பில் பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி ஆகியோா் உரையாற்றினா். நிகழ்ச்சியில் பபாசி செயற்குழு உறுப்பினா் ஆா்.சங்கா் வரவேற்றாா். பபாசி செயலா் எஸ்.கே.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினா் வி.யுவராஜ் நன்றி கூறினாா்.