I won't miss any of Soubin and Suraj Venjaramoodu's movies! - Gautam Vasudev Men...
வருண்குமார் - சீமான் வழக்கு: திருச்சி நீதிமன்றத்த்தில் ஆஜராக சீமானுக்கு நோட்டீஸ்!
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திருச்சி சாட்டை துரைமுருகன் கடந்த வருடம் கைது செய்யப்பட்டபோது அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த சில ஆடியோக்கள் ‘லீக்’ ஆனது. சாட்டை துரைமுருகனுடன் பேசிய சீமான், மூத்த நிர்வாகிகள் குறித்து அவதூறாகப் பேசியது அந்த ஆடியோக்கள் மூலம் வெளியானது.
அதே நேரத்தில், அப்போது திருச்சி மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றிய வருண்குமார், சாட்டை துரைமுருகனின் செல்போன்களில் இருந்த ஆடியோக்களை எடுத்து கசிய விட்டதாக சீமான் பரபரப்பு குற்றச்சாட்டை பொதுவெளியில் முன்வைத்தார். அதோடு, குறிப்பிட்ட சில சாதியினரை சாதி வன்மத்துடன் எஸ்.பி வருண்குமார் அணுகி வருவதாகவும் சீமான் அதிரிபுதிரியான குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த விவகாரம் அப்போது பேசுபொருளாக மாறியது. இதனையடுத்து, அப்போது திருச்சி மாவட்ட எஸ்.பி-யாக இருந்த வருண்குமார், புதுக்கோட்டை எஸ்.பி-யாக இருந்த வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சில எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன. இதன் பின்னணியில் சீமான் இருப்பதாக வருண்குமார் ஐ.பி.எஸ் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதோடு, டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எஸ் சம்பந்தமான அகில இந்திய அளவிலான மாநாட்டில் கலந்துகொண்ட வருண்குமார், ‘ நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம். அதை தடை செய்ய வேண்டும்’ என்று பேசி, அடுத்த பரபரப்புக்கு பந்தல்கால் போட்டார்.
இதற்கு எதிர்வினையாற்றிய சீமான், ‘தைரியம் இருந்தால் காக்கி சட்டையை கழற்றி வைத்துவிட்டு வா. எவ்வளவு காலம் இந்த வேலையில் இருக்க முடியும்?’ என்று பேசி, வருண்குமாருக்கு பதிலடி கொடுத்தார் சீமான். இதற்கிடையில், வருண்குமார் ஐ.பி.எஸ் தரப்பு சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அது தொடர்பாக 15 விளக்கத்தை சீமான் அளித்திருந்தார். ஆனால், தங்கள் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை எனக் கூறி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார். மேலும், புகார் தொடர்பாக கடந்த மாதம் 30-ம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் வருண்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இதற்கிடையே, வருண்குமார் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஆகியோரை டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. வருண்குமார் திருச்சி சரக டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 8-ம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக வருண்குமார் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதனை குறித்துக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில், திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணை நேற்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக வருண்குமார் தாக்கல் செய்த ஆவணங்கள் சீமானுக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வரும் பிப்ரவரி 19-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், ஏற்கெனவே பெரியார் குறித்த பேச்சால் சீமானுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புகார் அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் விசாரணைக்கும் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.