ஹரியாணா: கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் பலி, 3 பேர் மாயம்
வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு! எவ்வாறு பயனளிக்கும்?
வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனுடன், மாத வருவாய் ஈட்டுவோர், ரூ.75,000 கூடுதல் கழிவாகப் பெற முடியும்.
இதனால், ரூ.12 லட்சம் வரை வருவாய் ஈட்டும் நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய வரிச்சலுகை கிடைத்துள்ளது. கையில் கொஞ்சம் காசு மிச்சமாகும், அதனை சேமிக்கலாம், அல்லது அவர்களது அடிப்படைத் தேவைகளை சிக்கல் இல்லாமல் பூர்த்தி செய்துகொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
சரி, இந்த வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு எவ்வாறு ஒருவரது மாத ஊதியத்தில் எதிரொலிக்கும் என்பது பற்றி..
ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. மாத ஊதியம் பெறும் தனி நபர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது, ஒரு தனி நபரின் ஆண்டு வருவாய் ரூ.12 லட்சம் வரை இருந்தால், மாதம் ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்டினால் வருமான வரி கிடையாது.
இந்த வருமான வரி உச்ச வரம்பு இதற்கு முன்பு ரூ.7 லட்சத்திலிருந்து தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு வரி விலக்கு ரூ.50 ஆயிரம் ஆக இருந்தது ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அது போல வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் உச்ச வரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2 சொந்த வீடுகளுக்கு வரிச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாதச் சம்பளம் மட்டுமல்லாமல் மூலதன ஆதாயங்கள் உள்ளிட்ட இதர வருவாய்கள் மூலம் ஈட்டும் வருமானத்துக்கான வரி விகிதங்கள்
ஆண்டு வருமானம் ரூ. 4 லட்சம் வரை - வருமான வரி கிடையாது
ரூ. 4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - 5% வருமான வரி
ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை - 10% வரி
ரூ. 12 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் வரை - 15% வரி
ரூ. 16 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை - 20% வரி
ரூ. 20 லட்சம் முதல் ரூ. 24 லட்சம் வரை - 25%
ரூ. 24 லட்சத்துக்கு மேல் - 30% வரி செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரூ.12 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு ரூ.80 ஆயிரம் வரை வரி மிச்சமாகும். மாத வருவாய் ஈட்டுவோராக இருந்தால், மொத்த வரியும் அவர்களுக்கு மிச்சமாகும். ஒருவேளை ரூ.12 லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டுபவர்களாக இருந்தால், அவர்களது வருவாயின் அளவுக்கு ஏற்ப, வரி விகிதம் பொருந்தும்.
ரூ.12 லட்சம் வருவாய் ஈட்டுபவர்கள் மாதம் ரூ.7000 மிச்சம் பிடிக்கலாம். ரூ.18 லட்சம் வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.6,000 வரை சேமிக்கலாம், ரூ.25 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ரூ.9,000 வரை சேமிக்கலாம் என்று கூறப்படுகிறது.