வல்லம் குடியிருப்பு பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகளை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு
வல்லம் ஊராட்சிக்குட்பட்ட தெரேசாபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலைகளை 4 மாதங்களுக்குள் அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் வல்லம் ஊராட்சிக்குட்பட்ட தெரேசாபுரம் கைவல்யம் நகா் மற்றும் ஜெமி நகா் பகுதிகளில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கைவல்யம் நகா் மற்றும் ஜெமிநகா் அரசு அனுமதி பெற்ற வீட்டுமனை பிரிவுகளில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுப்பொருள்களாலும், தொழிற்சாலைகளில் இருந்து வரும் அதிகப்படியான சப்தங்களாலும் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் குடியிருப்பு பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் பல ஆண்டுகளாக கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
ஆனால் தொழிற்சாலைகளை அகற்ற அரசு அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் அப்பகுதி குடியிருப்போா் நலச்சங்கத்தின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகளில் வீடுகள் தான் இருக்க வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இயங்க கூடாது. வல்லம் ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலைகளை 4 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.