வடக்கு காஸாவில் அனைத்து அரசு மருத்துவமனைகளும் மூடல்!
காஸாவின் வடக்கு பகுதியில் செயல்பட்டு வந்த கடைசி மருத்துவமனையும் இஸ்ரேல் ராணுவ கட்டுபாட்டுக்குள் வந்துள்ளதால் அங்கும் மருத்துவ சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்குள் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் ஊடுருவி அங்குள்ள சுமார் 250 மக்களை பிணைக்கைதிகளாக ஹமாஸ் படையினர் காஸாவுக்கு பிடித்துச் சென்றதுடன், அவர்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலில் கொல்லப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காஸாவில் பல்வேறு கட்டமாக தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் படையினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனிடையே, காஸாவில் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளதன் வெளிப்பாடாய், வடக்கு காஸாவிலுள்ள இந்தோனேஷியன் மருத்துவமனை இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
காஸாவின் வடக்கு பகுதியில் இருந்த பிற மருத்துவமனைகளில், தொடர் தாக்குதல்களால் மருத்துவ சேவைகள் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், மேற்கண்ட இந்த மருத்துவமனையில் மட்டுமே காயமடைந்தோருக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இப்போது அந்த மருத்துவமனையும் இஸ்ரேல் ராணுவத்தால் முடக்கப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க:காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 66 பேர் பலி