ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: தோனியின் ரசிகர்கள் ’தானா சேர்ந்த கூட்டம்!’ - ஹர்பஜன் சிங் புகழாரம்
நேஹல் வதேரா, ஷஷாங் சிங் அரைசதம்
முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. பிரியன்ஷ் ஆர்யா 9 ரன்களிலும், மிட்செல் ஓவன் 0 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பிரப்சிம்ரன் சிங் 10 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். 34 ரன்களுக்கு பஞ்சாப் கிங்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன் பின், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நேஹல் வதேரா இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. ஷ்ரேயாஸ் ஐயர் 25 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். அதன் பின், நேஹல் வதேராவுடன் ஷஷாங் சிங் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அபாரமாக விளையாடியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர்.
நேஹல் வதேரா 37 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஷஷாங் சிங் 30 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இதையும் படிக்க: வீரர்கள் அவர்களை நன்றாக புரிந்துகொண்டால்.... என்ன சொல்கிறார் ராகுல் டிராவிட்?
ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குவெனா மபாகா, ரியான் பராக் மற்றும் ஆகாஷ் மத்வால் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
பஞ்சாப் கிங்ஸ் வெற்றி
220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராஜஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். ராஜஸ்தான் அணி 76 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 15 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இதையும் படிக்க: மழையால் கைவிடப்பட்ட போட்டி; டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் ஆர்சிபி!
கேப்டன் சஞ்சு சாம்சன் 20 ரன்களிலும், ரியான் பராக் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய துருவ் ஜுரெல் 31 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரது அதிரடி ராஜஸ்தானின் வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை.
பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ஹர்பிரீத் பிரார் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மார்கோ யான்சென் மற்றும் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்பிரீத் பிரார் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.