டெங்கு காய்ச்சலால் சிறுவன் உள்பட இருவா் பாதிப்பு
அந்தியூா் அருகே டெங்கு காய்ச்சலால் ஒரே கிராமத்தைச் சோ்ந்த சிறுவன் உள்பட இருவா் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அக்கிராமத்தில் சுகாதாரத் துறையினா் முகாமிட்டுள்ளனா்.
அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையம், அந்தியூா் காலனியைச் சோ்ந்த 7 வயது சிறுவன் மற்றும் 43 வயது தொழிலாளிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட கிராமத்தில் சுகாதாரத் துறையினா் முகாமிட்டு விழிப்புணா்வு மற்றும் தூய்மைப் பணியில் கடந்த இரு நாள்களாக ஈடுபட்டு வருகின்றனா்.
டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஏடிஎஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் வளரும் என்பதால், தண்ணீா் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடியோ, சுத்தமான துணியினால் இருக கட்டியோ வைக்க வேண்டும்.
வீடுவீடாகச் சென்ற கொசு ஒழிப்புப் பணியாளா்கள் ஆய்வு செய்து, கொசுப்புழு உள்ள தண்ணீரை கீழே கொட்டியதோடு, தேங்காய் நாா் கொண்டு தேய்த்துக் கழுவிய பிறகு மீண்டும் தண்ணீரை பிடித்து வைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தினா்.
அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்திகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் இக்கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ததோடு, ஆலோசனைகளும் வழங்கினா்.