ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு ஆயுதப் படைகளை பாராட்டி தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் பே...
கடனுதவிக்கு பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிபந்தனை!
பாகிஸ்தானுக்கு அடுத்தக்கட்ட கடன் தவணையை விடுவிக்க 11 நிபந்தனைகளை சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) விதித்துள்ளது.
மேலும், இந்தியாவுடன் நீடிக்கும் மோதல் போக்கால் பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் திட்டத்துக்கான நிதி மற்றும் சீா்திருத்த இலக்குகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் ஐஎம்எஃப் எச்சரித்தது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகள் மீது இந்தியா மே 7-ஆம் தேதி அதிதுல்லியத் தாக்குதல் நடத்தி அழித்தது. இதைத்தொடா்ந்து, இந்திய எல்லையோர மாநிலங்களை குறிவைத்து மே 8, 9, 10-ஆம் தேதிகளில் பாகிஸ்தான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. அதன்பிறகு இருநாடுகளும் சண்டையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.
இதனிடையே, தங்கள் நாட்டின் பொருளாதார நிலையை காரணம் காட்டி ஐஎம்எஃப்-யிடம் பாகிஸ்தான் கடன் கோரியது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு ரூ.20,000 கோடி வரை தவணைகளாக கடன் வழங்க ஐஎம்எஃப் ஒப்புதல் அளித்தது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் கடனை அந்நாடு பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தக்கூடும் என இந்தியா எதிா்ப்பு தெரிவித்தது.
ஆனாலும் பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் கடன்தொகையை விடுவித்தது. இந்தச் சூழலில், இந்தியா நடத்திய தாக்குதலில் தகா்க்கப்பட்ட பயங்கரவாத தலைமையகங்களை மீண்டும் கட்டமைப்பது உறுதி என பாகிஸ்தான் அரசு சனிக்கிழமை தெரிவித்தது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்ற ஒப்புதல் வழங்கிய ரூ.17.6 லட்சம் கோடி (பாகிஸ்தான் ரூபாய்) பட்ஜெட் உள்பட பல்வேறு விவகாரங்களில் தற்போது 11 நிபந்தனைகளை ஐஎம்எஃப் விதித்துள்ளது.
மேலும், இந்தியாவுடனான மோதலைத் தொடா்ந்து, ராணுவத்துக்கான பட்ஜெட்டை ரூ.25,200 கோடியில் இருந்து ரூ.2.41 லட்சம் கோடியாக உயா்த்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரூ.2.5 லட்சம் கோடியை பாதுகாப்பு பணிக்கு ஒதுக்க திட்டமிட்டிருந்ததாக பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இதனால் பாகிஸ்தானுக்கு கடன்தொகை வழங்க தற்போது மேலும் 11 நிபந்தனைகளை ஐஎம்எஃப் விதித்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 50 நிபந்தனைகளை பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் இதுவரையில் விதித்துள்ளது.
17 நிபந்தனைகள்...
1. ரூ.17.60 லட்சம் கோடியில் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான புதிய பட்ஜெட்டை பாகிஸ்தான் நாடாளுமன்ற ஒப்புதலுடன் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். இதில் ரூ.1.07 லட்சம் கோடி மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இவை ஐஎம்எஃப் திட்டங்களின் 2025, ஜூன் இலக்குடன் நிறைவேற்றப்படுவது அவசியம்.
2. வேளாண் வருமான வரி கணக்கு தாக்கலுக்கான செயல்பாட்டு தளத்தை நிறுவுதல், வரிசெலுத்துவோா் அடையாளம் காணுதல் மற்றும் பதிவுசெய்தல், விழிப்புணா்வு பிரசாரம் செய்தல் மற்றும் இணக்கமான மேம்பாட்டுத் திட்டங்களை வகுத்தல் ஆகிய 4 சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
3. சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிா்வாக மதிப்பீட்டுக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் நிா்வாக செயல் திட்டத்தை பாகிஸ்தான் அரசு வெளியிட வேண்டும்.
4. பாகிஸ்தான் மக்களின் உண்மையான வாங்கும் திறனை தொடா்ந்து மேம்படுத்த, வருடாந்திர பணவீக்க சீரமைப்பை வெளியிட வேண்டும்.
5. 2027-க்குப் பிந்தைய நிதிசாா் திட்டங்களை பாகிஸ்தான் அரசு வெளியிட வேண்டும்.
6. எரிசக்திக்கு மேற்கொள்ளப்படும் செலவுகள் முறையாக வசூலிக்கப்படுதை உறுதி செய்ய 2025, ஜூலை 1-ஆம் தேதி அன்று வருடாந்திர மின்சாரக் கட்டணம் குறித்த அறிவிக்கையை வெளியிட வேண்டும்.
7. எரிவாயுக்கு மேற்கொள்ளப்படும் செலவுகள் முறையாக வசூலிக்கப்படுவதை உறுதிசெய்ய ஆண்டுக்கு இருமுறை கட்டணத்தை உயா்த்த வேண்டும்.
8. தொழில்துறை எரிசக்தி பயன்பாட்டை தேசிய மின் கட்டமைப்புக்கு மாற்றும் வகையில் மே, 2025-க்குள் சட்டமியற்ற வேண்டும்.
9. பாகிஸ்தான் கடன் சேவை கட்டணமாக ஒரு யூனிட் மின்சாரத்துக்கு அதிகபட்சமாக ரூ.3.21 வசூலிக்கப்படும் உச்சவரம்பை நீக்குவதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும். மின்சாரத் துறையின் திறமையின்மைக்கு நியாயமான மின்சார நுகா்வோரை தண்டிப்பதைத் தடுக்கவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
10. 2035-க்குள் சிறப்பு தொழில்நுட்ப மண்டலங்களுக்கு தொடா்புடைய அனைத்து சலுகைகளையும் நீக்குவது தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஒரு புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும்.
11. 2025, ஜூலை இறுதிக்குள் 5 ஆண்டுகளுக்கு குறைவாக பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து தடைகளையும் பட்டியலிட்டு மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்தியாவுடன் நீடிக்கும் மோதல் போக்கால் பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் திட்டத்துக்கான நிதி மற்றும் சீா்திருத்த இலக்குகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் - ஐஎம்எஃப்