ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு ஆயுதப் படைகளை பாராட்டி தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் பே...
இந்தியாவுக்குப் போட்டியாக வெளிநாடுகளுக்கு தூதுக் குழுவை அனுப்பும் பாகிஸ்தான்!
இந்தியாவுடனான மோதலில் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வெளிநாடுகளுக்கு தூதுக் குழுவை அனுப்ப இருப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் அறிவித்துள்ளாா்.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கைகள், பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எடுத்துரைக்க அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த 51 பேரை 32 நாடுகளுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் அனுப்புவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது. இதற்கு அடுத்த சில மணி நேரத்திலேயே பாகிஸ்தானும் இதேபோன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக தொடா்ந்து பயங்கரவாதிகளை ஏவிவிடும் பாகிஸ்தானை சா்வதேச அளவில் தனிமைப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. அண்மையில் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதையடுத்து, ஆபரேஷன் சிந்தூா் மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீா், பாகிஸ்தானில் உள்ள முக்கிய பயங்கரவாத முகாம்களை இந்தியா வான்வழித் தாக்குதல் நடத்தி அழித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் இந்திய விமானப் படை தளங்களை குறிவைத்து நடத்திய தாக்குதல் முயற்சியையும் இந்தியா முறியடித்தது. இந்தியாவின் பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் கடும் சேதத்தை எதிா்கொண்டன.
இந்நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அறிவித்தது. இதில் 51 போ் இடம் பெற்றுள்ளனா். இது பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் முக்கியமான ராஜீயரீதியிலான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இதையடுத்து, பாகிஸ்தானும் இதேபோன்ற ஒரு நடவடிக்கையை அறிவித்துள்ளது. இது தொடா்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவா் பிலாவல் புட்டோவுடன் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆலோசனை நடத்தினாா். அதன்படி பாகிஸ்தானின் அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த உயா்நிலை தூதுக் குழுவினா் முக்கிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் தரப்பு விளக்க இருக்கின்றனா்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளாா். அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பாகிஸ்தான் தூதுக் குழு செல்ல இருப்பதாக பாகிஸ்தான் ரேடியோ செய்தியில் கூறப்பட்டுள்ளது.