சசி தரூரைச் சுற்றி நகரும் அரசியல்! கேரள காங். சொல்வதென்ன?
மத்திய அரசு நியமித்துள்ள எம்.பி.க்கள் குழுவில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இணைக்கப்பட்டுள்ளதில் காங்கிரஸ் தலைமைக்கு விருப்பமில்லையா? என்று தேசிய அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அனுப்பி பாகிஸ்தான் விவகாரத்தில் சர்வதேச ஆதரவு கோர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கட்சியைச் சோ்ந்த நாடாளுமன்ற பிரதிநிதிகளை பிற நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்பேரில், 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பவுள்ளது. ரவி சங்கா் பிரசாத் தலைமையிலான குழு சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கும் வைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் சசி தரூா் தலைமையிலான குழு அமெரிக்காவுக்கும் கனிமொழி தலைமையிலான குழு ரஷியாவுக்கும் ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு ஆப்பிரிக்க, வளைகுடா நாடுகளுக்கும் சுப்ரியா சுலே தலைமையிலான குழு ஓமன், கென்யா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளனர்.
இந்த நிலையில், இதுதொடா்பாக காங்கிரஸிடம் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசியதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.
மத்திய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவில் காங்கிரஸ் தரப்பிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட பெயர்ப்பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் ஷர்மா, மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுவின் துணைத் தலைவரான கௌரவ் கோகாய், மாநிலங்களவை எம்.பி. சையத் நாசர் ஹுசைன், மக்களவை எம்.பி. ராஜா ப்ரார் ஆகியோரை சேர்த்துக்கொள்ள அரசிடம் பரிந்துரைத்தது. ஆனால், காங்கிரஸால் கை காட்டப்படாத திருவனந்தபுரம் மக்களவை தொகுதி உறுப்பினரான சசி தரூரை மத்திய அரசு எம்.பி.க்கள் குழுவுக்கு தலைமையேற்க அழைப்பு விடுத்ததால் காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தில் சர்ச்சைகளுக்கு இடமில்லை என்பதை தமது பதில் வழியாக தெளிவுபடுத்தியிருக்கிறார் சசி தரூர்.
“இவ்விவகாரத்தில் எவ்வித அரசியலும் இல்லை. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு என்னைத் தொடர்புகொண்டு அலுவல் ரீதியாக அழைப்பு விடுத்து எம்.பி.க்கள் குழுவுக்கு தலைமையேற்க கேட்டுக்கொண்டதால்தான் நான் இதற்கு உடனடியாக சம்மதம் தெரிவித்து ஏற்றுக்கொண்டேன். கடந்த காலங்களில் வெளியுறவு விவகாரங்களில் எனக்கு அனுபவம் இருந்ததால் என்னை இக்குழுவுக்கு தலைமையேற்க அவர்கள் அழைத்தனர்” என்று சசி தரூர் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி. டி. சதீஷனிடம் இன்று(மே 18) செய்தியாளர்கள் தரப்பிலிருந்து கேள்வியெழுப்பியதற்கு, “காங்கிரஸ் செயற்குழுவில் சசி தரூரும் ஒரு உறுப்பினராக உள்ளார். அப்படியிருக்கும்போது, கட்சித் தலைமை இவ்விவகராத்தில் தெரிவிக்கும் கருத்தையே எங்களால் வெளிப்படுத்த முடியும். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை உங்களுடன் பகிர்வோம்” என்று விஷயத்தை தவிர்த்துவிட்டுச் சென்றார் வி. டி. சதீஷன்.
கேரள காங்கிரஸில் மூத்த தலைவரும் அம்மாநில முன்னாள் உள்துறை அமைச்சருமான திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், “காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதொரு நாடாளுமன்ற உறுப்பினராக தமது கடமையை தரூர் நிறைவேற்ற வேண்டும், கட்சித் தலைமை அனுமதியின்பேரில் மட்டுமே சர்வதேச அளவிலான செயல்பாடுகளை அவர் மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.