அமெரிக்க வாழ் இந்தியர்களின் விசா ரத்தாகும் அபாயம்?
புது தில்லி: இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் புதிய கொள்கையின்படி, அமெரிக்காவில் 30 நாள்களுக்கு மேல் வசிக்கும் அனைத்து வெளிநாட்டவரும் அரசிடம் பதிவு செய்வது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில், அமெரிக்காவிலிருக்கும் வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகக் கருதப்பட்டு, அவர்கள் அனைவரும் அங்கிருந்து நாடு கடத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாது, அவர்களுடைய அமெரிக்க விசா ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து இம்மாதத்தில் தொடர்ந்து 3-ஆவது முறையாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டு மக்கள் தங்களுக்கான காலக்கெடு முடிந்த பின்னும் அமெரிக்காவில் தங்கியிருந்தால், நீங்கள் நாடு கடத்தப்படலாம்... மேலும், அமெரிக்காவுக்கு வருகை தருவதற்கான அனுமதி நிரந்தரமாக தடை செய்யப்படலாம்” என்று கூறப்பட்டுள்ளது.