குடியிருப்புக்கு வெளியே காலணியை வைப்பதற்காக ரூ. 24,000 அபராதம் செலுத்திய நபர்!
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு வாசலில் காலணியை வைத்துக்கொள்வதற்காக இளைஞர் ஒருவர் அபராதம் செலுத்தி வருகிறார். ஒரு நாளுக்கு ரூ.100 வீதம் 8 மாதங்களுக்கு ரூ. 24,000 அபராதம் செலுத்தியுள்ளார்.
தற்போது காலணியை வெளியே வைப்பதற்கு அடுக்குமாடி குடியிருப்பு கூட்டமைப்பு அபராதத் தொகையை ரூ.200 ஆக உயர்த்தியுள்ளது. இதனால், இனி நாளொன்றுக்கு ரூ. 200 அபராதம் செலுத்த வேண்டிய நிலை அந்த இளைஞருக்கு ஏற்பட்டுள்ளது.
பெங்களூருவில் பிரிஸ்டீஜ் சன் பார்க் என்ற அடுக்குமாடி குடியிருப்ப்பின் கூட்டமைப்பில், வசித்துவருவோருக்கு பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
1,046 வீடுகள் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பினுள் பொதுவான இடங்களில் காலணி அலமாரி (ஷூ ரேக்), பூச்செடிகள், அட்டைப் பெட்டிகள் போன்ற தனிப்பட்ட பொருள்களை வைத்துக்கொள்ளக்கூடாது என்ற விதியும் உண்டு.
இது குறித்து அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. நான்கு வாரங்களில் குடியிருப்பில் வசித்துவந்த பலரும் தங்கள் பொருள்களை பொதுவான இடமாகக் கருதப்படும், வாசல் வழித்தடங்களில் இருந்து எடுத்துவிட்டனர். இருவர் மட்டுமே இதனைப் பின்பற்றவில்லை.
அதில் ஒருவர் இறுதி எச்சரிக்கையைத் தொடர்ந்து, கூட்டமைப்பின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டார். மற்றொரு இளைஞர், தனது காலணி வைக்கும் அலமாரியை மாற்றவில்லை.
காலணி அலமாரியை எடுத்து உள்ளே வைப்பதற்கு பதிலாக, பொது இடமான வழித்தடத்தில் வைப்பதற்காக ரூ. 15,000 தொகையை முன் அபராதமாக அடுக்குமாடி குடியிருப்பு கூட்டமைப்பிடம் செலுத்தியுள்ளார்.
தற்போது 8 மாதங்களுக்கு ரூ.24,000 அபராதமாக செலுத்தியுள்ளார். இன்னும் அவர் தனது காலணி அலமாறியை வழித்தடத்தில் இருந்து எடுக்காததால், அபராதத்தை இனி நாளொன்றுக்கு ரூ.200 ஆக்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இதையும் படிக்க |கோழிக்கோடு பேருந்து நிலைய கடையில் தீ விபத்து!