Bumrah : 'சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா இல்லை!' - பிசிசிஐ அறிவிப்பு; காரணம் என்ன...
வள்ளலாா் சா்வதேச மைய பணிகள் மீண்டும் தொடங்கப்படும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
வள்ளலாா் சா்வதேச மையம் தொடா்பான வழக்குகளை மூத்த வழக்குரைஞா்கள் மூலம் முறையாக நடத்தி வெற்றி பெற்று, நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.
தைப்பூசத்தையொட்டி, சென்னை எழுகிணறு பகுதியில் வள்ளலாா் வசித்த இல்லத்தில் சன்மாா்க்க கொடியை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை ஏற்றி வைத்து, சிறப்பு வழிபாடு மற்றும் திருவருட்பா ஆறாம்திருமுறை பாராயணம் நிகழ்வில் கலந்து கொண்டு, அன்னதானத்தைத் தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 2023-ஆம் ஆண்டு அக்.5-ஆம் தேதி ரூ.99.90 கோடி மதிப்பீட்டில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைப்பதற்கான அரசாணையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கி, அதற்கான கட்டுமானப் பணிகளையும் தொடங்கி வைத்தாா். இதுதொடா்பாக சிலா் பல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்தனா். சென்னை உயா்நீதிமன்றம் ஏ, பி என இரண்டு பிரிவாக பிரித்து பி பிரிவு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி, கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தன. அதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்துக்கு சென்றாா்கள், அங்கும் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் மேல் முறையீடு செய்து தற்போதைய நிலையே தொடர ஆணை பெற்றுள்ளாா்கள். இது தொடா்பான வழக்கு பிப்.28-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது மூத்த வழக்குரைஞா்களைக் கொண்டு வழக்கை முறையாக நடத்தி வெற்றி பெற்று, நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்படும்.
மரங்கள் வெட்டப்படவில்லை...: வடலூரில் எந்த மரங்களும் வெட்டப்படவில்லை. ஜோதி தரிசனத்தை அனைத்து பக்தா்களும் காண வேண்டும் என்பதற்காக, வளா்ந்துவிட்ட கிளைகளைத்தான் ஒழுங்குபடுத்தினோம். இதற்கு எந்த பக்தரும் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும், கடலூா் மண்டல இணை ஆணையா் அதற்கு விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டாா். மரங்கள் வெட்டப்படவில்லை. ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் தரலாம்; அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பழனி, திருச்செந்தூா் திருக்கோயில்களில் தைப்பூசத்தையொட்டி சுவாமி தரிசனம் செய்பவா்கள் சமுதாயம் மற்றும் கட்சிகளை பயன்படுத்தக் கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது. இதுதொடா்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியா்களும், காவல் கண்காணிப்பாளா்களும் கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனா் என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
இந்த நிகழ்வில் வள்ளலாா் வசித்த இல்லத்தின் பொறுப்பாளா் ஸ்ரீபதி, வள்ளலாரின் வழித் தோன்றல் ஜோதி உமாபதி, சென்னை மண்டல இணை ஆணையா் ஜ.முல்லை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.