'மத்திய புலனாய்வு அமைப்புகள் சட்டத்தைக் கையில் எடுத்து மக்களை துன்புறுத்த முடியா...
"வள்ளுவரையும், வள்ளலாரையும் கபளிகரம் செய்ய ஒரு கூட்டம் திட்டம் தீட்டி வருகிறது" - மு.க.ஸ்டாலின்
"வள்ளுவருக்கு கருணாநிதி கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் பிரமாண்ட சிலை அமைத்தார். அதன் வெள்ளிவிழா ஆண்டில் வள்ளுவர் சிலையை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி..." என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்துக்கு வருகை தந்த தந்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர், அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தன் தாயார் பெயரில பொதுமக்களின் பயன்பாட்டிற்கு 12 கோடி ரூபாய் செலவில் கட்டியுள்ள திருமதி லட்சுமி வளர்தமிழ் நூலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர், தொடர்ந்து அழகப்பா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவரின் சிலையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் மாநிலங்களைவை எம்.பி ப.சிதம்பரத்தோடு, கவிஞர் வைரமுத்து, அமைச்சர்கள் பெரியகருப்பன், கோவி செழியன், கார்த்தி சிதம்பரம் எம்.பி உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் பல்கலைக்கழக அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "வள்ளல் அழகப்பர் வாழ்ந்த மண்ணிற்கு வந்ததில் பெருமை அடைகிறேன், இந்த வளாகத்தில் லட்சுமி வளர் நூலகத்தையும் அய்யன் திருவள்ளுவர் சிலையையும் திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
வழக்கறிஞர், தொழிலதிபர் போன்ற அடையாளங்களோடு தொண்டு செய்து வாழ்ந்தவர் வள்ளல் அழகப்பர். பிரதமர் நேரு அவரை சோஷலிச முதலாளி என்று பேசினார். இந்திய விடுதலைக்குப்பின் சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய துணைவேந்தர் லட்சுமண முதலியார், அறியாமை இருளில் தவிக்கும் மக்கள் விடுதலை அடைய பின் தங்கிய பகுதிகளில் கல்லூரிகள் திறக்க வேண்டுமெனக் கூறினார். அப்போது அங்கிருந்த அழகப்ப செட்டியார், ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்து, நான் கல்லூரி தொடங்குகிறேன் என்றார். கல்வியையும் தமிழ்த் தொண்டையும் சேர்த்து ஆற்றிய அவரால் பலர் பட்டங்களை பெற்று உலக அளவில் சிறந்து விளங்குகிறார்கள்.
வான்புகழ்கொண்ட வள்ளுவருக்கு கருணாநிதி கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் பிரமாண்ட சிலை அமைத்தார். அதன் வெள்ளிவிழா ஆண்டில் வள்ளுவர் சிலையை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி. வள்ளுவரின் நெறியை வாழ்வியல் நெறியாக மாற்ற வேண்டும். குறள் நெறியை பின்பற்றி தமிழகம் முழுவதும் பல்வேறு கல்விப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். குறள் நெறியை பின்பற்றினால்தான் தமிழகமும், உலகமும் காப்பாற்றப்படும்.
வள்ளுவர், வள்ளலார் போன்ற தமிழ்மண்ணில் சமத்துவம் பேசியவர்களை கபளிகரம் செய்ய ஒரு கும்பல் சதித்திட்டம் தீட்டி வருகிறது.
இதை தடுக்க ஒவ்வொரு தமிழரும் அரணாகத் திகழ வேண்டும். திமுகவின் வீரமிக்க கவிஞரான முடியரசனார் பெயரை இங்குள்ள அரங்கத்துக்கு சூட்டியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ப.சிதம்பரம் கட்டி கொடுத்துள்ள நூலகத்தை திறந்ததில் பெருமையடைகிறேன். ப.சிதம்பரத்தை பொறுத்தவரை அவர் ஒரு நடமாடும் நூலகம். அரசியல், பொருளாதாரம், வரலாறு, சட்டம், இலக்கியம் ஆகியவற்றில் மிகுந்த ஆழம் கொண்டவர். அரசின் ஒவ்வொரு திட்டங்கள் குறித்து அவர் கூறும் கருத்துக்காக நான் காத்திருப்பேன்.
தொலைக்காட்சி, இணையதளம் வாயிலாக இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன், கொடையுள்ளமும் அறிவுத்தாகமும் கொண்டவர்கள் ஒவ்வொரு ஊரிலும் நூலகம் அமைக்க முன் வரவேண்டும் .
ஆட்சிக்கு வந்தவுடன் துண்டு, சால்வை அணிவிக்காமல் எனக்கு புத்தகங்களை கொடுங்கள் என்று கூறியதால், பரிசாக கிடைத்த 2 லட்சத்து 75 ஆயிரம் புத்தகங்களை பல நூலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். ப.சிதம்பரம் அமைத்துள்ள இந்த நூலகத்திற்கு முதல் கட்டமாக 1000 புத்தகங்களை அனுப்பி வைக்கிறேன். அரசு சார்பிலும் புத்தகங்களை வழங்க உள்ளேன். பல்வேறு கல்வி திட்டங்களினால் உயர் கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது.
கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து என்று அடிக்கடி சொல்லி வருகிறேன். இளைஞர்கள் கல்விச்செல்வத்தை சேர்க்க பாடுபடுங்கள். பொருட்செல்வம் உங்களைத் தேடி வரும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் கல்வித்துறை இருக்க வேண்டும். இதற்காத இறுதி வரை சட்டப்போராட்டம் நடத்தும்" என பேசினார்.