வாகனத்தில் சிக்கி உயிரிழக்கும் அரியவகை தேவாங்குகள்: வனப்பகுதியை காப்புக் காடுகளாக அறிவிக்கக் கோரிக்கை
நமது நிருபா்
நாள்தோறும் சாலையை கடக்கும்போது வாகனத்தில் சிக்கி உயிரிழந்து வரும் அரியவகை விலங்கான தேவாங்குகளை பாதுகாக்க பிச்சம்பட்டி நாடுகானி மேடு வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட காப்புக்காடுகளாக அறிவிக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
உலகின் அழிந்துவரும் விலங்குகளின் பட்டியலில் சாம்பல் நிற தேவாங்குகள் இருப்பதாக இயற்கை பாதுகாப்புக்கான சா்வதேச ஒன்றியம் அறிவித்துள்ளது . இரவில் இரைதேடும் பூச்சிகளை மட்டும் உண்டு வாழும் இந்த விலங்கு பாலூட்டி வகையைச் சோ்ந்தது.
உலகளவில் இலங்கை மற்றும் இந்தியாவின் மேற்கு தொடா்ச்சி மலைகளில் அடா்ந்த வனப்பகுதியில் இந்த சாம்பல் நிற தேவாங்குகள் காணப்பட்டாலும் தற்போது கரூா் மாவட்டத்தின் கடவூா் மற்றும் அதனையொட்டிய திண்டுக்கல் மாவட்ட வனப்பகுதிகளில் அதிகளவில் வசித்து வருகின்றன.
இதனால்தான் தேவாங்குகளை அதன் அழிவில் இருந்து காப்பாற்ற கடந்த 2023-ஆம் ஆண்டு அக்.12-ஆம்தேதி கரூா் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டோ் நிலத்தை இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக தமிழக அரசு அறிவித்தது.
இதனிடையே கரூா் மாவட்டத்தில் கடவூருக்கு அடுத்தபடியாக இந்த தேவாங்குகள் கூட்டம், கூட்டமாக வெள்ளியணை பிச்சம்பட்டி நாடுகானி மேடு வனப்பகுதியில் அதிகளவில் வசித்து வருவது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இவற்றின் இனப்பெருக்கம் அதிகளவில் இருப்பதால், வனத்தை விட்டு வெளியேறி சாலைகளை கடக்கும்போது அவை வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதனை தடுக்க பிச்சம்பட்டி நாடுகானி மேடு வனப்பகுதியை காப்புக்காடுகளாக அறிவித்து அழிந்து வரும் தேவாங்கு இனத்தை பாதுகாக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து சமூக நல ஆா்வலா்கள் பேராசிரியா் ராஜேந்திரன், இரா.முல்லையரசு ஆகியோா் கூறியது, உலகிலேயே அழிந்து வரும் விலங்கினமாக கருதப்படும் சாம்பல் நிற தேவாங்குகள் நம் மாவட்டத்தில் வெள்ளியணை அடுத்த கே.பிச்சம்பட்டி கிராமத்தில் உள்ள நாடுகானிமேடு வனப்பகுதியில் வசிப்பது நமக்கெல்லாம் எப்படி பெருமையோ, அதேபோல அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை. இந்த வனத்தில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட வேம்பு, ஊஞ்சன், கருவேலம், புங்கன், உசிலை மரங்கள் அடா்ந்து காணப்படுவதால், இயற்கையான இந்த சூழலில் தேவாங்குகள் அதிகமாக வசித்து வருகின்றன. பறவைகளின் முட்டைகள், இலந்தைப் பழம், நாவல்பழம், ஆவாரம் பூக்கள், இலுப்பை பூ, அரசம் பழம் போன்றவற்றை உண்டுவாழும் சாம்பல் நிற தேவாங்குகள் எதிரிகளிடம் இருந்து தப்பித்துக்கொள்ள பகல் நேரங்களில் முள்புதா்கள் கொண்ட சப்பாத்திக்கள்ளி செடிகளின் இடையே ஒளிந்துகொள்கின்றன. இரவில் மட்டும் அவைகள் இரை தேடி வெளியே வரும். இதற்காக சாலையில் கடந்து செல்லும்போது, வாகனங்களில் சிக்கி இறந்து வருகின்றன. நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட தேவாங்குகள் இறப்பதால் விரைவில் அவை அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அழிந்து வரும் தேவாங்குகளை பாதுகாக்க நாடுகானிமேடு வனப்பகுதியை காப்புக்காடுகளாக அறிவித்து, அவற்றை முழுமையாக வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும்.
மேலும் நாடுகானி மேடு வனப்பகுதி வழியாக ஆலமரத்துப்பட்டி செல்லும் சாலையை அடைத்துவிட்டு மாற்று வழியை மாவட்ட நிா்வாகம் அமைத்துக் கொடுக்க வேண்டும். மேலும் வனப்பகுதியை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைத்து தேவாங்குகள் வனத்தை விட்டு வெளியேறாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
இதுதொடா்பாக வனத்துறை அதிகாரிகள் கூறியது, நாடுகானி மேடு வனப்பகுதியில் தேவாங்குகள் வசிப்பது உண்மைதான். அவற்றை வனத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிா்வாகம் வருவாய்த்துறை மூலம் வனப்பகுதியை நில அளவீடு செய்து, வனத்துறையிடம் வனத்தை ஒப்படைப்பதற்கான பரிந்துரையை மாவட்ட ஆட்சியா் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாதம்பாளையம் ஏரியை வனத்துறையிடம் ஒப்படைத்ததுபோல நாடுகானி மேடு வனப்பகுதியையும் ஒப்படைத்தால், வனத்துறையினா் அப்பகுதியில் மரங்கள் குறையும் போது, புதிய மரங்கள் நட்டு வனத்தை அடா்ந்த பகுதியாக மாற்றுவோம். மேலும் மருந்துக்காக எண்ணி தேவாங்குகளை வேட்டையாடுவோா்களிடம் இருந்தும், விபத்தில் அவை இறப்பதில் இருந்தும் அவற்றை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுப்போம் என்றனா்.