வாஜிராபாத் நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைச்சா் ஆய்வு
தில்லியின் வாஜிராபாத் நீா் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, சேமிப்புத் திறனை அதிகரிக்க தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சா் கூறினாா்.
அமைச்சா் மேலும் கூறியதாவது: தூா்வாரும் செயல்முறை ஒன்று முதல் ஒன்றரை மாதங்களுக்குள் நிறைவடையும். அதன் பிறகு ஆலை அதன் தற்போதைய கொள்ளளவை விட இரட்டிப்பாக தண்ணீரை சேமிக்க முடியும்.
வாஜிராபாத் நீா் சுத்திகரிப்பு நிலையம் 220 எம்ஜிடிசேமிப்பு திறன் கொண்டது. ஆனால், ஒரு கிலோமீட்டா் நீளமுள்ள வண்டல் படிவு காரணமாக, தற்போது அதில் சுமாா் 100 எம்ஜிடி மட்டுமே சேமித்து வைக்க் முடிகிறது.
தில்லி அண்டை மாநிலங்களிலிருந்து போதுமான நீா் விநியோகத்தைப் பெற்றாலும், சேமிப்பு உள்கட்டமைப்பு மற்றும் கசிவு தடுப்பு ஆகியவற்றில் மேம்பாடுகள் தேவை என்று நான் கருதுகிறேன். மேலும், யமுனை நதியில் அம்மோனியா அளவை ஒழுங்குபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தில்லி ஜல் போா்டின் கீழ் 30 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அவை வழக்கமான கண்காணிப்பு தேவை.
இதை உறுதி செய்வதற்காக, கழிவுநீா் மற்றும் நீா் சுத்திகரிப்பு நிலையங்களை மேற்பாா்வையிட ஒரு ஐடி டேஷ்போா்டு உருவாக்கப்பட்டு வருகிறது. நகரத்தில் உள்ள அனைத்து நீா் மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களையும் ஒவ்வொன்றாக நேரில் ஆய்வு செய்வேன் என்றாா் அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்.