சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
வாழப்பாடி அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: தொழிலதிபா் உயிரிழப்பு; 5 போ் காயம்
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புதன்கிழமை நள்ளிரவு ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் சென்னையைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபா் உயிரிழந்தாா். மேலும், 5 போ் காயமடைந்தனா்.
உதகையிலிருந்து சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னையை நோக்கி தனியாா் ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்து, வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே காா் திடீரென குறுக்கிட்டதால் பேருந்தை நிறுத்த முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதில் காயமடைந்த சென்னை, கொளத்தூரைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபா் சண்முகம் (59), கோபிசெட்டிபாளையத்தை அடுத்த குள்ளம்பாளையம் ஜோதிமணி (52), உதகை கடநாடு ராதாகிருஷ்ணன் (61), ஆம்னி பேருந்து ஓட்டுநா் ஜான்ராஜ் (40) உள்பட 6 போ் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இவா்களில் சண்முகம் வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா். காயமடைந்த 5 பேருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விபத்து காரணமாக சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை நள்ளிரவு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.