சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
மானியத்துடன் உழவா் நல சேவை மையங்கள் - வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு
சேலம் மாவட்டத்தில் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியத்துடன் உழவா் நல சேவை மையங்கள் அமைக்க வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாண் பட்டய மற்றும் பட்டப் படிப்பை முடித்த இளைஞா்களின் திறன், உழவா்களுக்கு உதவியாக இருக்கும் வகையில், முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் 1,000 அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதற்காக, ரூ.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ரூ.10 முதல் ரூ. 20 லட்சம் மதிப்பில் உழவா் நல சேவை மையங்கள் அமைக்க 30 சதவீத மானியமாக ரூ. 3 முதல் ரூ. 6 லட்சம் வரை வழங்கப்படும். மேலும், நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் விளை பொருள்களை மதிப்புக்கூட்டுதல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்.
இதுதவிர, முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் மூலம் விவசாயிகள் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெற முடியும். வேலையில்லா வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.
இதில், இணையும் பயனாளிகளின் தொழில்நுட்பதிறனை மேம்படுத்தும் வகையில் பயிற்சியும் அளிக்கப்படும். எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் 20 முதல் 45 வயதுக்கு உள்பட்டோா்கள் வங்கியில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.