ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
விகடன் இணையதள முடக்கம்: 'அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கை!' - என்.ராம் காட்டம்!
விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்பட்டது. இந்த முடக்க நடவடிக்கையைக் கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது. அதில் கலந்துகொண்ட பத்திரிகையாளர் என்.ராம் கருத்துச் சுதந்திரம் சம்பந்தமாக மிக முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.

மூத்த பத்திரிகையாளர் என். ராம் பேசியதாவது,
"பிப்ரவரி 10ம் தேதி வெளிவந்த விகடனின் டிஜிட்டல் ஒன்லி விகடன் ப்ளஸ் இதழில் வரையப்பட்டிருந்த கார்ட்டூனை பற்றி அண்ணாமலை போன்றோர் தவறாக கருத்து பரப்பி விட்டனர். விகடனுக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை, அரசு ஆணையையும் வெளியிடவில்லை. வியாழன் அன்று நடக்கும் விசாரணையில் நடப்பதை வைத்து தான் அடுத்து என்ன என்பது தெரியவரும். ஒருவேளை ஒன்றிய அரசு உறுதியாக இருந்தால் நாம் அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் அரசு தோல்வியைத்தான் தழுவும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது 1987ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆனந்த விகடனில் வந்த ஒரு கார்டூனுக்காக என் நண்பர் பாலசுப்பிரமணியன் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு வந்த தீர்ப்பில் அவர் பக்கம் தவறில்லை என்று கூறி அவருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. பாலசுப்பிரமணியன் நஷ்டஈடாக ஒரு ரூபாய் கேட்டார். நீதிமன்றம் 1,000 ரூபாய் கொடுக்க சொல்லி உத்தரவிட்டது. இன்றும் அதை விகடன் அலுவலகத்தில் மாட்டி வைத்திருக்கிறார்கள்.

இன்று விகடனுக்கு நடந்துள்ள சம்பவத்தை அரசு, நீதிமன்றம் என யாராலும் நியாயப்படுத்த முடியாது. இது ஓர் அராஜகமான செயல். மனித உரிமை, அரசியலமைப்புச் சட்டம் என எல்லாவற்றுக்கும் எதிரானது இது. இதைப் பற்றி சென்னை பத்திரிகையாளர் மன்றம் மக்களுக்கு விழிப்புணர்வை எற்படுத்த ஜனநாயகப்பூர்வமாக இந்த ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.' எனக் கூறினார்.