விசாரணைக்கு ஆஜரானார் சீமான்!
நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஆஜரானார்.
வழக்கு தொடர்பாக காவல் துறை 2 முறை சம்மன் அனுப்பிய நிலையில் தற்போது சீமான் ஆஜராகி உள்ளார். காவல் நிலையம் வரை சீமானின் காரை அனுமதிக்க வேண்டும் என காவல் துறையுடன் தொடண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீமானின் காரை மட்டும் அனுமதித்த காவல்துறை, மற்ற கார்களை தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும், வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே கூடியுள்ள நாதகவினர் தடுப்புகளை தாண்டி உள்ளே செல்ல முயன்றனர். இதனால் நாதகவினர்-காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விசாரணைக்கு ஆஜராகியுள்ள சீமானிடம் 50க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் பெற காவல் துறை திட்டமிட்டுள்ளது.
சீமான் ஆஜராவதையொட்டி வளசரவாக்கம் காவல் நிலையத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாதகவினர் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்து அழைத்துச் செல்ல பேருந்துகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் வளசரவாக்கம் காவல் நிலையம் உள்ள ஸ்ரீதேவி குப்பம் சாலையில் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையை நிறைவடைந்த பின் கைது நடவடிக்கைகளும் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வளசரவாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.