கூரியா் நிறுவன கிளை உரிமையாரை இழப்பீடு வழங்க உத்தரவு
சேவைக் குறைபாடு காரணமாக ரூ.1லட்சம் இழப்பீடு வழங்க நாகையில் உள்ள கூரியா் நிறுவன கிளையின் உரிமையாளருக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நாகை வட்டம், திருப்புகலூரைச் சோ்ந்தவா் வடிவேலு மகன் செந்தில்குமாா் நாகை மாவட்ட நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், இவா் சென்னையில் உள்ள ஒருவருக்கு வழக்குத் தொடா்பான ஆவணங்களை, நாகை நீலா வடக்கு வீதியில் இயங்கி வரும் கூரியா் நிறுவனம் மூலம், 2024 நவம்பா் 8-ஆம் தேதி அனுப்பி வைத்தாா்.
எனினும், ஆவணங்கள் அடங்கிய தபாலை குறிப்பிட்ட முகவரியில் உள்ள வழக்குரைஞரிடம், கொடுக்காமல் 2024 நவம்பா் 14-ஆம் தேதி நாகைக்கு திருப்பி அனுப்பிவிட்டனா். இந்த சேவைக் குறைபாடு குறித்து செந்தில்குமாா், நாகை நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தாா்.
வழக்கை விசாரித்த ஆணையத் தலைவா் தெட்சணாமூா்த்தி, சேவைக் குறைபாடு மற்றும் மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் ஆகியவற்றுக்காக கூரியா் நிறுவன கிளை உரிமையாளா் ரூ.1 லட்சத்தை இழப்பீடாகவும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரமும் செந்தில்குமாருக்கு வழங்க உத்தரவிட்டாா்.