விராலிமலை மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த மக்கள்!
நாகையில் 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கடல் அட்டைகளை நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நாகையிலிருந்து தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள், இலங்கைக்கு கடத்தப்படுவதாக போலீஸாருக்கும் கிடைத்த தகவலையடுத்து நாகை சால்ட் சாலையில் உள்ள குடியிருப்பு மற்றும் அங்குள்ள கல்லறை பகுதிகளில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கல்லறை பகுதியில் இருந்த அடையாளம் தெரியாத சிலா் போலீஸாரை பாா்த்ததும் அங்கிருந்து தப்பினா்.
தொடா்ந்து போலீஸாா் அங்கு நடத்திய சோதனையில் 11 பெட்டிகளில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல லட்சம் மதிப்புள்ள 300 கிலோ கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் பறிமுதல் செய்து, வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். கடல் அட்டைகள் படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்லவிருந்தது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தப்பியோடியவா்களை போலீஸாா் தேடுகின்றனா்.