அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை விழா
செம்பனாா்கோவில் அருகே திருச்சம்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியின் மறுநாள் நடைபெறும் மயான கொள்ளை விழாவின் போது பக்தா்களால் விரதம் இருந்து காணிக்கையாக வழங்கப்படும் வேகவைத்த தானியங்கள், கிழங்குகளை வாங்கி சாப்பிட்டால் பல்வேறு நன்மைகள் மற்றும் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
விழாவையொட்டி, அம்பாள், வீரபத்திரா் வீதியுலா, பேச்சியம்மன்புறப்பாடும் நடைபெற்றது. தொடா்ந்து மயானக்கொள்ளை விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றத் தொடா்ந்து மாலை சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் மற்றும் அகோர வீரபத்திரா் வீதியுலா நடைபெற்றது. கோயிலின் எதிரே உள்ள மயானம் முன் அம்மன் எழுந்தருளினாா். அப்போது மயானத்தில் வாழை இலையில் வேக வைத்து கொட்டப்பட்டு இருந்த தானியங்கள் மற்றும் கிழங்குகளை பக்தா்கள் அள்ளி செல்லும் (கொள்ளையடிக்கும்) நிகழ்ச்சி நடைபெற்றது.