ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்ப...
விசைத்தறி நெசவாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு; போலீசாருடன் வாக்குவாதம்!
விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
சூலூர் அருகே சோமனூரில் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூலி உயர்வு வேண்டுமெனவும் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் கூறி கடந்த 32 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, கடந்த 6 நாள்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோவை, திருப்பூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு காலம் தாழ்த்துவதைக் குறித்து கண்டனத்தை தெரிவித்தனர். விரைந்து முத்தரப்பு பேச்சுவர்த்தையை நடத்தி விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டு கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதனை அடுத்து திடீரென ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதியில் இருந்து முழக்கங்களை எழுப்பியவாறு உண்ணாவிரத பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் போலீசாரிடம் ஆர்ப்பாட்டத்துக்கு மட்டும் அனுமதி வாங்கிவிட்டு பேரணி நடத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் கருமத்தம்பட்டி போலீசார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேரணி அனுமதி பெறவில்லை எனவும், அனுமதியின்றி பேரணி நடத்தியது குறித்து கருமத்தம்பட்டி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தங்கராமன், கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் வடிவேலு உள்ளிட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.