எண்ணெய்க் கப்பல்கள், ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்குத் தடை! ரஷியாவை இறுக்கும் பிரி...
``விஜய் கூட்டணி ஆட்சியை முன்னெடுத்தால் நாங்கள் பரிசீலிப்போம்'' - டாக்டர் கிருஷ்ணசாமி
"தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமைய வேண்டும்; விஜய் அதனை முன்னெடுப்பார் என்றால், கூட்டணி குறித்து பரிசீலிப்போம்," என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி:
"பரமக்குடியிலுள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு பொதுமக்கள் மரியாதை செலுத்த அரசுப் பேருந்துகளை ஒப்பந்தம் செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு வரை 1 கிலோமீட்டருக்கு ரூ. 40 மட்டுமே வசூலிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கட்டணம் உயர்த்தப்பட்டு மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. 200 கி.மீ. தூரத்திற்கு ரூ. 12 ஆயிரம் வசூலிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ. 26 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை உயர்த்தியிருக்கிறார்கள். இதற்கான ரசீதுகளும் வழங்கப்படவில்லை.
இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அரசு பேருந்துகள் வாடகைக்கு விடப்பட்டதில் சுமார் ரூ. 5 கோடி வரை மோசடி நடந்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை விளக்கம் தர வேண்டும்; இல்லையெனில் வழக்கு தொடரப்படும்."
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் டீக்கடைகள் இயங்குவதற்கு கூட காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதுபோன்ற விழாக்களில் தமிழக அரசு மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஜனவரி 7 அன்று மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு நடைபெறுகிறது. கட்சியின் சார்பில் கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம்.
தமிழகத்தில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடைபெற்று வருகிறது. கோயில்களில் உள்ள நகைகளை உருக்கியது தொடர்பான தகவல்கள் இல்லை; உருக்கக்கூடிய தங்கத்தில் உள்ள விலையுயர்ந்த வைர, முத்து, பவளக் கற்கள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கட்டுமானப் பணியில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது. அந்த கோயிலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே அறங்காவலராக உள்ளனர். முடிகாணிக்கை செலுத்தியதில் மட்டும் ரூ. 7 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் திராவிடம் நிலைத்து நிற்கும் என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை; கள நிலவரங்களுக்கு ஏற்ப முடிவு எடுப்போம். நாங்கள் திறந்த மனதோடு இருக்கிறோம்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே அமைய வேண்டும் எனில், விஜய் அதை முன்னெடுப்பார் என்றால், கூட்டணி குறித்து மாநாட்டுக்குப் பிறகு முடிவெடுக்கப்படும். விஜய் கூட்டணி ஆட்சி முன்னெடுப்பார் என்றால், அதனைப் பற்றி பரிசீலிப்போம்.

மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைக்கும் விவகாரத்தை மீண்டும் பேசுவது அவசியமில்லை. 1998 ஆம் ஆண்டு அரசு எடுத்த முடிவின்படி, பொதுவான பெயர் வைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள சாதித் தலைவர்களின் சிலைகளை அகற்றி ஒரே இடத்தில் வைக்க வேண்டும்.
விமான நிலையங்களுக்கு பெயர் வைக்கும் கலாசாரம் மீண்டும் சமூகத்தை கீழே அழைத்து செல்லும். இது பிளவுபடுத்தும் வாக்கு அரசியல்தான். தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்துடன் கிராம மக்கள் பசிக்குப் பட்டினியோடும் உள்ளனர்; அதை குறித்து பேசவேண்டும்" என்றார்.