சிறுவாபுரி செல்லும் பக்தர்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
`விஜய் பரபரப்பு ஏற்படுத்த நினைக்கிறாரா?' - விமான நிலையம் விவகாரத்தில் வானதி சீனிவாசன் கேள்வி
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திருவள்ளுவரையும், வள்ளலாரையும் வேறு யாரோ களவாட முயற்சிக்கிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்து ஞான கருத்துக்களைத்தான் திருவள்ளுவரும், வள்ளலாரும் கூறியுள்ளனர். அவர்கள் இருவரும் இந்துக்கள் அல்லாதவர்கள் போன்ற உருவத்தில் மத அடையாளங்களை திமுக தவிர்த்து வருகிறது.
உயர்கல்வித்துறைக்கு அதிகமான நிதி மத்திய அரசு கொடுக்கிறது. இதற்கு முன்பாக துணைவேந்தர் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அது மாறிவிட்டது. கல்வித்துறையை சுதந்திரமாக சிறந்த கல்வியாளர்களை வைத்து நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
கவர்னர் மீது தனிப்பட்ட தாக்குதலை திமுக அரசு நடத்தி வருகிறது. அவரை தரக்குறைவாக விமர்சித்து, கட்சி அரசியலுக்குள் அவரை இழுத்து வருவதும் திமுக-தான்.
டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக பாஜக ஒருபோதும் இருக்காது. விமான நிலையத்துக்கு சென்னையில் வேறு எங்கே இடம் இருக்கிறது என்று தவெக தலைவர் விஜய் சொல்ல வேண்டும். விஜய் மக்களிடம் ஏதாவது பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறாரா என்று தெரியவில்லை.
வளர்ச்சிக்காக கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கு விஜய்யிடம் என்ன தீர்வு இருக்கிறது என்று அவர் சொல்ல வேண்டும்.” என்றார்.