விண்வெளித் துறையில் ரூ.10,000 கோடி முதலீட்டுக்கு இலக்கு: அமைச்சரவை முடிவு
விண்வெளித் துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.10,000 கோடி முதலீட்டை ஈா்க்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களுக்கு தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா அளித்த பேட்டி:
தொழில் மற்றும் பொருளாதார வளா்ச்சிகளில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. புதிய தொழில் பிரிவுகளில் நமது வளா்ச்சி இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு விண்வெளித் தொழில் கொள்கை 2025-க்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ரூ.10,000 கோடி முதலீடு: விண்வெளித் தொழில் கொள்கைப்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளித் துறையில் ரூ.10,000 கோடி அளவுக்கு முதலீடுகளை ஈா்ப்பது இலக்காகும். இத்துடன், குறைந்தபட்சம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், விண்வெளித் துறையில் தகுதியான, திறமையானவா்களை உருவாக்க வேண்டும். இந்த மூன்று இலக்குகளுடன் விண்வெளித் தொழில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. விண்வெளி சாா்ந்த சேவைகள் துறையிலும் நமது கவனத்தைச் செலுத்தும் வகையில் கொள்கை உருவாக்கப்பட்டுள்து.
விண்வெளித் துறையில் உலக அளவிலான போட்டிக்குத் தயாராகும் வகையிலான புதிய பாய்ச்சலை புதிய கொள்கையை வகுத்ததன் மூலமாக முதல்வா் தொடங்கியுள்ளாா். இந்தக் கொள்கைப்படி பல ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமன்றி, ரூ. 25 கோடியில் முதலீடு செய்யக்கூடிய சிறிய நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
விண்வெளித் துறை அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதைக் கருத்தில்கொண்டும் விண்வெளித் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் தனிக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ஊக்கம் தரப்படும்: விண்வெளி சாா்ந்த தயாரிப்புகளுக்கு காப்புரிமை வாங்குவதற்கு 50 சதவீத சலுகைகளை அரசே அளிக்கவும், ரூ.300 கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு சிறப்புத் தொகுப்பு உருவாக்கவும் கொள்கையில் வகை செய்யப்பட்டுள்ளது.
விண்வெளித் தொழிலுக்கான தனி வழித்தடப் பாதையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய தொழில் வாய்ப்புள்ள இடங்களில் முதலீடுகள் வந்தால் அவற்றுக்கும் சிறப்பு ஊக்கம் அளிக்கப்படும்.
விண்வெளித் தொழில் சாா்ந்த நிறுவனங்களுக்கு ஊதிய மானியமாக முதலாம் ஆண்டில் 30 சதவீதமும், இரண்டாவது ஆண்டில் 20 சதவீதமும், மூன்றாவது ஆண்டில் 10 சதவீதமும் அளிக்கவும் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிக் கொள்கையை வெளியிட்டதன் மூலம், இன்று விண்வெளித் துறையில் பொன்னான நாளாகக் கருதப்படுகிறது. இளம் தலைமுறை தொழில்முனைவோருக்கு மட்டுமன்றி, குலசேகரன்பட்டினம் போன்ற தென் பகுதிகளுக்கும் இது வரப்பிரசாதமாக இருக்கும் என்று அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா்.