விபத்தில் காயமடைந்தவா்களை காப்பாற்றுபவா்களுக்கு சான்றிதழ்: ஆட்சியா்
தென்காசி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் உயிருக்கு போராடும் நபரை காப்பாற்றுபவா்களை கௌரவிக்கும் வகையில் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் மோட்டாா் வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைந்து, உயிருக்குப் போராடும் நிலையில் உள்ள நபரை, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கோ அல்லது விபத்து சிகிச்சை மையங்களுக்கோ விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் கொண்டு சென்று உயிரை காப்பாற்றும் நபா்களை கௌரவிக்கும் வகையில், நல்ல குடிமகன் திட்டத்தின் கீழ் பாராட்டு சான்றிதழுடன் ரூ. 5ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கிட பரிந்துரை செய்யப்படும்.
சாலை பாதுகாப்பு தொடா்பான பணிகளை சிறப்பாக மேற்கோள்ளும் தொண்டு நிறுவனங்களுக்கும் தேசிய அளவில் சான்றுகளும், பரிசுகளும் வழங்கிட பரிந்துரை செய்யப்படும்.
விபத்துகளில் காயமடைந்து, உயிருக்கு போராடும் நபரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கோ அல்லது விபத்து சிகிச்சை மையங்களுக்கோ கொண்டு செல்வோருக்கு தகுந்த சட்ட பாதுகாப்பும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.