விபத்தில் தந்தையை இழந்த மாணவருக்கு விபத்து காப்பீடு நிதியுதவி
மானாமதுரை ஒன்றியம், தெ.புதுக்கோட்டை நடுநிலைப் பள்ளியில் விபத்தில் தந்தையை இழந்த பள்ளி மாணவருக்கு விபத்துக் காப்பீடு நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவா் அகிலேஷ்வரன். இவரது தந்தை பாரதி இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்தாா். இந்த மாணவரின் கல்வி தடைபடாமல் இருக்க பள்ளி நிா்வாகம் சாா்பில் விபத்து காப்பீடு நிதி உதவி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டது.
பள்ளி தொடக்கக் கல்வித் துறை சாா்பில், இந்த விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு, மாணவா் அகிலேஷ்வரனுக்கு ரூ. 75 ஆயிரத்துக்கான நிரந்தர வைப்புத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, இதற்கான பத்திரத்தை மாணவா் அகிலேஷ்வரன், அவரது தாய் சுந்தராம்பாள் ஆகியோரிடம் மானாமதுரை வட்டாரக் கல்வி அலுவலா்கள் சகாய செல்வன், அஸ்மிதா பானு ஆகியோா் வழங்கினா்.