விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் குறைந்துள்ளன: துறைச் செயலா் தகவல்
விமானங்கள், விமான நிறுவனங்களுக்கு போலியாக விடுக்கப்பட்டு வந்த வெடிகுண்டு மிரட்டல்களின் அச்சுறுத்தலை விமானப் போக்குவரத்து அதிகாரிகள் வெற்றிகரமாக கையாண்டுள்ளனா் என்றும் அத்தகைய மிரட்டல்கள் தற்போது குறைந்துள்ளன என்றும் அத்துறை செயலா் உம்லுன்மாங் வௌல்னம் தெரிவித்தாா்.
மூடுபனி தொடா்பான இடையூறுகளைச் சமாளிப்பதற்கான நடைமுறைகள் நெறிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவா் குறிப்பிட்டாா்.
நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நூற்றுக்கணக்கான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. சோதனையில் அவை புரளி என்று பின்னா் தெரியவந்தது. இதனால் பல்வேறு வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களின் விமானச் சேவைகளை கணிசமாக பாதித்தன.
தில்லியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற விமானப் போக்குவரத்து துறைச் செயலா் உம்லுன்மாங் வௌல்னமிடம் செய்தியாளா்கள் இதுதொடா்பாக கேள்வி எழுப்பினா்.
அதற்கு அவா் அளித்த பதிலில், ‘போலி வெடிகுண்டு மிரட்டல் அச்சுற்றுத்தல்களை எங்கள் பாதுகாப்புப் பிரிவு வெற்றிகரமாக கையாண்டுள்ளது. அத்தகைய மிரட்டல்களின் எண்ணிக்கை இப்போது குறைந்துவிட்டன.
மேலும், விமான நிலைய அச்சுறுத்தல் மதிப்பீட்டுக் குழுவிடமிருந்தும் ஆலோசனை செயல்முறை நெறிப்படுத்தப்பட்டுள்ளது. அவை மிக விரைவில் பதிலளிக்கக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளன.
விமானப் போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்படுத்தும் குளிா்காலத்துக்கான தயாா்நிலையின் ஒரு பகுதியாக, தாமதங்கள் அல்லது பயண ரத்து குறித்து பயணிகளுக்கு சரியான நேரத்தில் தெரிவிக்க விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தகைய சூழலில், பயணிகளுக்கான மாற்று ஏற்பாடுகளை விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு நினைவூட்ட புதிய வழிமுறைகளை நாங்கள் வழங்க இருக்கிறோம்’ என்றாா்.
முன்னதாக, குளிா்கால சேவையை விமான நிறுவனங்கள் எதிா்கொள்ளவது குறித்து பல்வேறு தரப்பினருடனான ஆய்வுக் கூட்டத்தை தில்லியில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு புதன்கிழமை நடத்தினாா்.