சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
விராலிமலையில் புதிய நீதிமன்ற கட்டப்பட உள்ள இடத்தில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு
விராலிமலையில் செயல்பட்டு வரும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்துக்கு, புதிய கட்டடம் கட்டுவதற்கான இடங்களை மாவட்ட நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
விராலிமலையில் தற்காலிக கட்டடத்தில் இயங்கிவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்துக்கு, புதிய கட்டடம் கட்டுவதற்கு, அரசுக்கு சொந்தமான காலி இடங்களை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்ட நிலையில், மாவட்ட நீதிபதிகள் பாா்வையிட்டு கட்டடம் கட்டுவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்தனா்.
விராலிமலை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞா் சமுதாய கூடத்தில், தற்காலிக நடுவா் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந் நிலையில், விராலிமலை-இனாம் குளத்தூா் சாலை கால்நடை மருத்துவமனை வளாகத்தில், பயன்பாடற்று கிடக்கும் சுமாா் 78 சென்ட் இடம் மற்றும் விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருண் ஹோட்டல் பின்புறம் உள்ள அரசு காலி இடம் ஆகியவற்றை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சி. குமரப்பன், எம். தண்டபாணி, ஆா். சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கடந்த ஆண்டு ஜூலை 27ஆம் தேதி பாா்வையிட்டு சாத்திய கூறுகளை ஆய்வு செய்தனா்.
இதே போல், மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரன் மற்றும் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பால் பாண்டியன் ஆகியோா் மேற்கண்ட இடத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
இதில், விராமலை நீதித்துறை நடுவா் அன்பு தாசன், இலுப்பூா் ஆா் டிஓ அக்பா் அலி, வட்டாட்சியா் கருப்பையா, விராமைலை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வழக்குரைஞா் தங்கப்பா, சந்திர ஜோதி, சேகா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.