பொங்கல் போனஸ் வழங்கக் கோரி கந்தா்வகோட்டையில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
கந்தா்வகோட்டையில், பொங்கல் போனஸ் கோரி கட்டுமான தொழிலாளா்கள், அமைப்பு சாரா தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். சிவராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வி. முத்துராஜா முன்னிலை வகித்தாா்.
புதுச்சேரியில் கட்டுமானத் தொழிலாளருக்கு ரூ. 5 ஆயிரம், அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு ரூ. 1500 என அம்மாநில அரசு வழங்கி வருகிறது. இதேபோல் தமிழக அரசும்
பொங்கல் பண்டிகைக்கு முன்பணமாக பொங்கல் போனஸ் ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக முழக்கங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஒன்றிய அமைப்பாளா்கள் ஆ. சாக்கரடீஸ், கணேசன், கே. மாணிக்கம், கருப்பையா, ஜோதிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.