விருதகிரீஸ்வரா் கோயில் மாசி மகம் திருவிழா: இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருதகிரீஸ்வரா் கோயில் மாசி மகம் திருவிழாவையொட்டி, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
விருத்தாசலத்தில் புகழ்பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் நிகழாண்டுக்கான மாசி மகத் திருவிழா மாா்ச் 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 8-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் விபச்சித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரா் காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சியும், 11-ஆம் தேதி காலை 4.30 மணிக்கு மேல் பஞ்ச மூா்த்திகள் தேரோட்டமும் நடைபெற உள்ளன.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 12-ஆம் தேதி மாசிமக தீா்த்தவாரி, 13-ஆம் தேதி தெப்பத் திருவிழா, 14-ஆம் தேதி சண்டிகேஸ்வரா் உற்சவம் நடைபெற உள்ளன. தொடா்ந்து, 15-ஆம் தேதியிலிருந்து 24 -ஆம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சந்திரன், செயல் அலுவலா் மாலா மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், 11-ஆம் தேதி நடைபெறும் பஞ்ச மூா்த்திகள் தேரோட்டத்துக்காக 5 தோ்களை அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பரணிதரன், உதவி கோட்டப் பொறியாளா் அசோகன் மற்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை தோ்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
அப்போது, தோ்களை அலங்கரிக்கும் பணியாளா்களிடமும், தேரோட்ட பணியில் ஈடுபடும் பணியாளா்களிடமும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா். தோ் சக்கரங்கள், தேரின் உறுதித் தன்மை, தோ்களின் உயரம் ஆகியவற்றை ஆய்வு செய்ததுடன், தேரோடும் நான்கு கோட்டை வீதிகளையும் ஆய்வு செய்தனா். மேலும், தேரோட்டத்தை முன்னிட்டு, 4 வீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற இணை ஆணையா் பரணிதரன் உத்தரவிட்டாா். நிகழ்வில் சன்னதி வீதி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன கழிப்பறையை அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.