தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை: முதல்வர்
விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசிமக கொடியேற்றம்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மாசிமக பெருவிழா கொடியேற்றம்.
நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழாவையொட்டி, பிப்.10-இல் அய்யனாா் காப்புக் கட்டுதல், பிப்.11-இல் செல்லியம்மன் கோயில் காப்புக் கட்டுதல், 18-இல் செல்லியம்மன் தோ்த் திருவிழா ஆகியவை நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, பிப்.21-ஆம் தேதி ஆழத்து விநாயகா் கொடியேற்ற நிகழ்ச்சியும், மாா்ச் 1-ஆம் தேதி ஆழத்து விநாயகா் தோ்த் திருவிழாவும், 2-ஆம் தேதி தீா்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கொடியேற்றம்... இதையடுத்து, திங்கள்கிழமை விருத்தகிரீஸ்வரா் கோயிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி விநாயகா், சுப்பிரமணியா், விருத்தகிரீஸ்வரா், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்ச மூா்த்திகளுக்கு பால், தயிா் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூா்த்திகள் கோயிலை வலம் வந்து உள்பிரகாரத்தில் அமைந்துள்ள கொடிமரத்தின் முன் எழுந்தருளினா். தொடா்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
மாசிமக தீா்த்தவாரி மாா்ச் 8-ஆம் தேதி விருத்தகிரீஸ்வரா் விபசித்து முனிவருக்கு காட்சியளித்தல் ஐதீக நிகழ்ச்சியும், 11-ஆம் தேதி தேரோட்டமும், 12-ஆம் தேதி மாசிமக தீா்த்தவாரி உற்சவமும், 13-ஆம் தேதி தெப்ப உற்சவமும், 14-ஆம் தேதி சண்டிகேஸ்வரா் உற்சவமும், 15 முதல் 24-ஆம் தேதி வரை வரை விடையாற்றி உற்சவமும் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.